Published : 29 Jun 2022 07:27 AM
Last Updated : 29 Jun 2022 07:27 AM

கோயில் நில ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டிய அறநிலையத் துறை தூக்கத்தில் இருப்பதாக நீதிபதிகள் கண்டனம்

சென்னை: கோயில் நில ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய அறநிலையத்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் தூக்கத்தில் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள காளத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை எனக்கூறி மனுதாரர் சீனிவாசன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அறநிலையத் துறை தரப்பில், கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளில் 14 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ளவற்றை அகற்ற அவகாசம் தேவை என்றும், தற்போது வரை 1100 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்டு நீதிபதிகள் கூறியது: கோயில் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுகின்றன. அதை தடுக்க வேண்டிய அறநிலையத் துறை தூக்கத்தில் இருக்கிறது. ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருந்தால் இவ்வளவு வழக்குகள் தொடரப்பட்டு இருக்காது. அதிகாரிகள் சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு கோயில் நலன் கருதி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்துக்கு வந்து உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டாலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முறையாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகத்தில் வரலாற்று சிறப்புமி்க்க பல கோயில்கள் இன்னும் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதற்கும் அதிகாரிகளின் செயல்பாடின்மையே காரணம்.

50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளை அனுமதித்து விட்டு, கடந்த ஓராண்டு காலமாக கண்துடைப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனக்கூறுவது ஏற்புடையதல்ல. கோயில் நிலங்களை குத்தகைக்கு விடுவதையும் அதிகாரிகள் முறையாக நடைமுறைப்படுத்தாதது வேதனையளிக்கிறது. இவ்வாறுகூறி விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x