Published : 15 May 2016 04:45 PM
Last Updated : 15 May 2016 04:45 PM

உதகை தனியார் விடுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணப் பட்டுவாடா? - திமுக, காங்கிரஸ் புகார்

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு அதிமுக வேட்பாளர்கள் பணப் பட்டுவாடா செய்ததாக, திமுக - காங்கிரஸ் நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

உதகையில் ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள தனியார் விடுதியில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், தேர்தல் செலவின பார்வையாளர் அஜய் மாலிக், வருமான வரித் துறை துணை ஆணையர் சபியா ரிஸ்வி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விடுதி அறையில் அதிமுக நிர்வாகிகள் இருந்தனராம். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், விடுதி மேலாளர் மேஜையில் அதிமுக வேட்பாளர்கள் பெயர்களில் ரூ.50 லட்சம் விநியோகத்துக்கான ரசீதுகளை, அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விடுதி மேலாளரிடம் விசாரணை நடத்தினர்.

நள்ளிரவு வரை நடந்த சோதனையில், அங்கிருந்த ஆவணங்களை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் அளித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ரவிகுமார் கூறும்போது, “வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்துள்ளனர். தேர்தல் பார்வையாளர்களிடம் முறையிட்டோம். வருமான வரித் துறை சோதனை செய்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பொ.சங்கர் கூறும்போது. “விடுதி மேலாளரிடமிருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x