அதிமுக பொதுக்குழு | சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

அதிமுக பொதுக்குழு | சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

Published on

சென்னை: நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் எம்.சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டும் என்றே அவமதித்த முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.

பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதை வழிமொழிந்த டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டும்.

தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதே நீதிமன்ற அவமதிப்பாக உள்ளபோது, அடுத்தப் பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அவர் அறிவித்தது மன்னிக்க முடியாத செயலாகும் . இது நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கான சதித்திட்டத்தை வெளிப்படுத்துகிறது. நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்காததால், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in