Last Updated : 28 Jun, 2022 08:52 PM

 

Published : 28 Jun 2022 08:52 PM
Last Updated : 28 Jun 2022 08:52 PM

“மக்கள் பிரச்சினைகளில் திமுக ஆட்சி என்றாலும் எதிர்த்து நிற்போம்” - கே.பாலகிருஷ்ணன்

ராமநாதபுரத்தில் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். உடன் கட்சி நிர்வாகிகள்.

ராமநாதபுரம்: “மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு, திமுக ஆட்சி என்றாலும், பாஜக ஆட்சி என்றாலும் நாங்கள் எதிர்த்து நிற்போம்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது, ''மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கண்டன குரல் எழுப்பி வருகிறோம். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் இப்போதே வெற்றி பெற்றுவிட்டார் எனச் சொல்வது பொறுத்தமற்றது, வெற்றி என்பது எளிதல்ல. ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கும் பாஜக ஆட்சி யாரை நிறுத்தினாலும் அதை எதிர்ப்போம். தமிழகத்தில் யஷ்வந்த் சின்காவிற்கு பாஜகவைவிட 3 மடங்கு கூடுதல் வாக்கு கிடைக்கும்.

ராணுவத்தில் அக்னி பாதை திட்டம், ஒப்பந்தப்படையாக மாற்றும் திட்டமாக உள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடவும், ஆர்எஸ்எஸ்ஸின் மதவெறிச் செயல்களில் கூட வாய்ப்பு இருக்கலாம். அதனால் இத்திட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.

தமிழகத்தில் அதிமுகவில் அதிகாரத்திற்கான போட்டி நடக்கிறது. இவர்கள் மக்களைப் பற்றி கவலைப்படாமல் பாஜகவின் மோசமான நடவடிக்கைகளை விமர்சிக்காமல் அவர்களது காலை பிடித்து கெஞ்சிக்கொண்டு உள்ளனர். நான் ஒரு போதும் பாஜகவை ஆதரிக்க மாட்டேன் என ஜெயலலிதா கூறினார். அதை மறந்து இப்போதைய அதிமுக தலைவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பாஜக இரண்டு பக்கமும் தூண்டிவிட்டுக் கொண்டு, தங்களது அரசியல் ஆதாயத்தை தேடிக் கொண்டிருக்கிறது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வரும் எம்பி தேர்தலில் தமிழகத்தில் 25 எம்பி இடங்களில் வெற்றி பெறுவோம் என்கிறார். உள்ளாட்சி தேர்தலில் கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

திமுக அரசு பல பணிகளை செய்தாலும், தொடர்ந்து காவல்நிலைய இறப்புகள் அதிகரித்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் போதைப் பழக்கம் அதிகமாக உள்ளது. இதுதான் சமூகத்தில் பல கலாசார சீரழிவுகளை ஏற்படுத்தக் காரணமாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கூட போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.

ராமேசுவரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட மீனவப் பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதில் முதல்வர் கவனம் செலுத்தி உடனடியாக வழங்க வேண்டும்.

மீனவர்களுக்கு விசைப்படகுகளுக்கு மானியமாக வழங்கப்படும் 1800 லிட்டர் டீசலை 3000 லிட்டராகவும், நாட்டுப்படகுகளுக்கு வழங்கப்படும் 300 லிட்டர் டீசலை 1000 லிட்டராகவும் அரசு வழங்க வேண்டும். காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்கவும், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கவும் வேண்டும்.

அதேபோல் அறுவடை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளைவிட வியாபாரிகளிடம் கொள்முதல் செய்வது அதிகளவில் நடக்கிறது என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் இந்திய அளவில் தமிழகம் 2-ம் இடம் வகிக்கிறது என கூறப்படுகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை ஆய்வு செய்து, கருத்தரங்கம் நடத்த இருக்கிறோம். அதேபோல் ஜூலையில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த உள்ளோம்.

நெருக்கடியான காலத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது. கரோனா 2, 3-வது தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. அப்படிப்பட்ட காலத்தில் தமிழக அரசு காவிரி, மேகதாது அணை பிரச்சினைகளில் தலையிட்டது. அதே சமயத்தில் திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளான குடும்பத்தலைவிக்கு ரூ.1000, பழைய ஓவ்வூதிய திட்டம், தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தில் பணியாற்றும் அனைவரையும் நிரந்தரப் பணியாளர்களாக்குவோம் எனக் கூறியது. இவற்றை நிறைவேற்ற வேண்டும்.

மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு, திமுக ஆட்சி என்றாலும், பாஜக ஆட்சி என்றாலும் எதிர்த்து நிற்போம். ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மீது காலதாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என முதல்வரிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆக்கபூர்வமான எதிர்கட்சி என்ற முறையில் அரசு செய்யும் நல்ல காரியங்களை பாராட்டுவதும், தவறுகளை சுட்டிக் காண்பிப்பதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பணியாக உள்ளது.

திமுக அரசு மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளில், சில வழக்குகளில் நீதிமன்றமும் தடையாக உள்ளது. ஆசிரியர் காலியிடங்களில் தற்காலிக அடிப்படையில் இல்லாமல் நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும். அப்போதுதான் தரமான கல்வியை வழங்க முடியும். அதேபோல் தான் மற்ற துறைகளிலும் உள்ள ஒப்பந்த, தொகுப்பூதியம், மதிப்பூதிய அடிப்படையில் உள்ளவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு 16 முறை உயர்த்திவிட்டு, 2 முறை மட்டும் குறைத்துள்ளது. மாநில அரசு குறைக்க வேண்டும் என்றால், மத்திய அரசு விதிக்கும் பல வரிகளை குறைத்தால், மாநில அரசின் வரி தானாகவே குறையும். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் ஏன் மத்திய அரசு கொண்டுவர மறுக்கிறது. பூரண மதுவிலக்கு படிப்படியாக கொண்டுவர வேண்டும். கச்சத்தீவு உடன்படிக்கையின்படி நமது மீனவர்கள் அங்கு சென்று தங்கவும், வலைகளை உலர்த்தவும் இலங்கை அரசிடம் மத்திய அரசு அனுமதி பெற்றுத்தர வேண்டும்'' என்றார்.

பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் காசிநாததுரை, தாலுகா செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x