Last Updated : 28 Jun, 2022 06:21 PM

 

Published : 28 Jun 2022 06:21 PM
Last Updated : 28 Jun 2022 06:21 PM

அலங்கார மின் விளக்குகளால் ஜொலிக்கப்போகும் திருச்சி மாநகராட்சி சாலைகள்

திருச்சி: திருச்சி மாநகராட்சி பகுதிகளிலுள்ள 2,302 தெருவிளக்குகளில் அதிக திறன்கொண்ட மின் விளக்குகள் ரூ.7.1 கோடி செலவில் பொருத்தப்பட உள்ளன.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தார் சாலைகள், சிமென்ட் சாலைகள், மண் சாலைகள் என 715 கி.மீ தொலைவுக்கு மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளும், 95.2 கி.மீ தொலைவுக்கு தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகளுக்குச் சொந்தமான சாலைகளும் உள்ளன. இவற்றில் இரவு நேரங்களில் அச்சமின்றி மக்கள் பயணிப்பதற்காக எல்இடி, சோடியம், ஹாலஜன், மெர்க்குரி தெருவிளக்குகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் உயர்கோபுர மின் விளக்குகள் என மொத்தம் 29,292 விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுபட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளிலுள்ள அனைத்து தெருக்கள் மற்றும் சாலைகளில் ரூ.14 கோடி செலவில் 6,266 மின் விளக்குகளைப் பொருத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, கடந்த அதிமுக ஆட்சியின்போது மின் சிக்கன நடவடிக்கைக்காக மாநகரிலுள்ள பெரும்பாலான தெருவிளக்குகளில் இருந்த அதிக திறன் வாய்ந்த மின் விளக்குகளை அகற்றிவிட்டு, 20 வாட்ஸ் திறன்கொண்ட எல்இடி மின் விளக்குகளைப் பொருத்தினர். ஆனால், இதில் போதிய வெளிச்சமில்லாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை: இதேபோல இரவு நேரங்களில், சாலைகளில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய, வாகனங்களில் தப்பிச் செல்லக்கூடிய குற்றவாளிகளை, தெருவிளக்குகளில் போதிய வெளிச்சமில்லாததால் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிவதிலும் காவல்துறைக்கு சிக்கல் எழுந்தது. மேலும் சில இடங்களில் போதிய வெளிச்சமில்லாததால் சாலைகளில் படுத்திருக்கும் மாடுகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கினர். இவற்றைச் சுட்டிக்காட்டி, மாநகரில் திறன்குறைந்து காணப்படும் தெருவிளக்குகளை அகற்றிவிட்டு, அதிக திறன்வாய்ந்த மின் விளக்குகளைப் பொருத்த வேண்டும் என அண்மையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கைவிடுத்தனர். இதன்மீது நடவடிக்கை எடுப்பதாக மேயர் மு.அன்பழகன் உறுதியளித்திருந்தார்.

20-க்கு பதில் 90; 120-க்கு பதில் 150: அதனடிப்படையில் 20 வாட்ஸ் திறன்கொண்ட அனைத்து எல்இடி மின் விளக்குகளையும் அகற்றிவிட்டு, அந்த இடங்களில் 90 வாட்ஸ் திறன்கொண்ட எல்இடி விளக்குகளைப் பொருத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக, ஒவ்வொரு வார்டிலும் தலா 25 மின் விளக்குகள் வீதம் 65 வார்டுகளில் ரூ.1.90 கோடி செலவில் மொத்தம் 1,625 மின் விளக்குகள் மாற்றியமைக்கப்பட உள்ளன. அதேபோல மாநகரின் முக்கிய சாலைகளிலுள்ள ஒருபக்க வளைவு மற்றும் இருபக்க வளைவு கொண்ட தெருவிளக்குகளில் 120 வாட்ஸ் திறன் கொண்ட எல்இடி மின் விளக்குகளை அகற்றிவிட்டு, அதற்குபதிலாக 150 வாட்ஸ் திறன்கொண்ட அலங்கார வகை மின் விளக்குகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 677 இடங்களிலுள்ள 120 வாட்ஸ் திறன்கொண்ட எல்இடி மின் விளக்குகள் அகற்றப்பட்டு, ரூ.5.11 கோடி செலவில் 150 வாட்ஸ் திறன்கொண்ட எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘முதற்கட்டமாக ஒவ்வொரு வார்டிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய தெரு சந்திப்புகளில் உள்ள தெருவிளக்குகளில் அதிக திறன் கொண்ட மின் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. இதன்மூலம், சாலைகள், தெரு சந்திப்புகளில் போதியளவுக்கு வெளிச்சம் கிடைக்கும். இதுதவிர, 150 வாட்ஸ் திறன்கொண்டதாக அமைக்கப்படும் மின் விளக்குகள் அனைத்தும், மாநகர சாலைகளை அழகுபடுத்தக்கூடிய அலங்கார வகை (ஹெரிட்டேஜ் டைப்) மின் விளக்குகளாக இருக்கும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x