

அரசியல் கட்சிகள் பெறுகிற வாக்குகளுக்கு தக்கபடி விகிதாச்சார பிரதிநிதித்துவம் வழங்கும் தேர்தல் முறைக்கான பொருத்தமான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாட்டின் தேர்தல் வரலாறு கண்டிராத அளவில் ஊழல், முறைகேட்டுப் பணப்புழக்கம் பகிரங்கமானதால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்திருக்கிறது. இதனை இந்தியக் கம்யூனிஸட் கட்சி வரவேற்கிறது.
இது தொடர்பாக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் எந்தெந்த வேட்பாளர்களுக்காக வாக்குகளைப் பெறுவதற்காக வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மது போன்றவைகள் கொடுக்கப்பட்டதோ அந்த வேட்பாளர்கள் மீது நடவடிக்கை இல்லாதது வியப்பளிக்கிறது.
நிரூபணமாகியுள்ள குற்றசாட்டுகளுக்கு காரணமான வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தைவிதிகளை மீறிய, முறைகேடுகளில் ஈடுபட்ட வேட்பாளர்களுக்கு அங்கீகாரம் அளித்த அரசியல் கட்சிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இரண்டு தொகுதிகளிலும் பணமுறைகேடு ஆவண பூர்வமாக அகப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் வகைதொகை இல்லாமல் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை மக்கள் அறிவார்கள்.
எதிர்காலத்தில் சார்பற்ற நடுநிலையோடும், நியாயமான, சுதந்திரமான வாக்குப் பதிவுக்கான சூழலை உருவாக்க தேர்தல் ஆணையம் பொருத்தமான தேர்தல் நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.
தற்போதுள்ள தேர்தல் முறைகளே ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் விளை நிலமாக இருப்பதால், அரசியல் கட்சிகள் பெறுகிற வாக்குகளுக்கு தக்கபடி விகிதாச்சார பிரதிநிதித்துவம் வழங்கும் தேர்தல் முறைக்கான பொருத்தமான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.