“தடை செய்யப்பட்ட பரிசுச் சீட்டுகள் கட்டுப்பாடின்றி விற்பனை” - ராமதாஸ் அதிர்ச்சி

ராமதாஸ் | கோப்புப் படம்
ராமதாஸ் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: “தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பரிசுச் சீட்டுகள் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சேலத்தில் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டு விற்பனை நடைபெற்று வருவதை காட்சி ஊடகம் மூலம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட பரிசுச் சீட்டுகள் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.

சேலம், சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் தடை செய்யப்பட்ட பரிசுச் சீட்டுகளும், ஒரு நம்பர் பரிசுச் சீட்டுகளும் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பாமகவும் இந்த சமூகத் தீமையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

ஆன்லைன் சூதாட்டம் என்ற மிகப் பெரிய சமூகத் தீமைக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனைக் குடும்பங்கள் சீரழிகின்றனவோ, அதை விட அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகளால் சீரழிந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் 2003ம் ஆண்டே பரிசுச் சீட்டுகள் தடை செய்யப்பட்டு விட்டன. அந்தத் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். பரிசுச் சீட்டுகளை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் ஏழைக் குடும்பங்கள் வீதிக்கு வருவதை தடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in