மேட்டூர் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்: காவிரியில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு

மேட்டூர் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்: காவிரியில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு
Updated on
1 min read

கர்நாடக மாநில காவிரி படுகை பகுதியில் கழிவுநீர் கலப்பதால் மேட்டூர் அணை நீர் மாசடைந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், அணை நீர்தேக்கப் பகுதியில் நேற்று மீன்கள் செத்து மிதந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அணை காவிரி நீர்த்தேக்கமான வீரனூர் பகுதியில் நேற்று காலை சுமார் 25 டன்கள் வரை மீன்கள் ஆங்காங்கே நீர்த்தேக்க பகுதியில் செத்து மிதந்தும், கரை ஒதுங்கியும் இருந்தன. இதை பார்த்த அப்பகுதி மீனவர்களும், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் இதுபோல் மீன்கள் அடிக்கடி செத்து மிதக்கும் சம்பவம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு பன்னவாடி, தின்னபட்டி வால்திட்டு மற்றும் மேட்டூர் அணைப்பகுதியில் மீன்கள் செத்து மிதந்ததாக மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

நேற்று காலை மீண்டும் வீரனூர் மற்றும் புதுவேலமங்கலம் ஆகிய பகுதிகளில் மீன்கள் டன் கணக்கில் செத்து மிதந்தன. இவ்வாறு மீன்கள் செத்து மிதப்பதற்கு, கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி ஆற்றில் கலந்து விடப்படும் கழிவுநீரே காரணம். மேலும், மேட்டூர் அணை அருகே தனியார் ரசாயன ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவும் காரணம் என தொடர்ந்து அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதைத் தடுக்க தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நேற்று வீரனூர் நீர் தேக்கப் பகுதியில் மீன்கள் செத்து கரை ஒதுங்கி இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், மீனவர்களும் வலியுறுத்தினர்.

காவிரியில் ரசாயன கழிவு கலப்பதால் மனித உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், கால்நடைகள் ஆற்று நீரை பருகுவதால், பல்வேறு உடல் உபாதைக்கு உள்ளாகின்றன. காவிரி ஆற்று நீரை தமிழக மக்கள் நம்பியுள்ள நிலையில், அது மாசடைந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடிக்கடி மீன்கள் செத்து மிதக்கின்ற நேரங்களில் மட்டும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் தலைகாட்டுகின்றனர். ஒப்புக்காக தண்ணீர் மாதிரிகள் எடுத்துச் செல்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மர்மமாக இருக்கின்றன என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

பொதுமக்களை சமாதானம் செய்யும் வகையில், தட்பவெட்ப நிலை மாற்றத்தால் சுவாசிக்க முடியாமல் மீன்கள் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர். மேட்டூர் அணைக்கு வரும் காவிரி நீரின் தரம் குறித்து ஆய்வு செய்வதோடு, கர்நாடக மாநில பகுதியில் காவிரியில் கலக்கும் கழிவுநீரை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மேட்டூர் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in