Published : 28 Jun 2022 06:47 AM
Last Updated : 28 Jun 2022 06:47 AM
ராமேசுவரம்: இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த 2 முதியவர்கள் தனுஷ்கோடி கோதண்டராமர் கடற்கரை பகுதியில் மயங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரமாக, மார்ச் 22 முதல் இதுவரை 90 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர். இவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் கடற்கரையில் இலங்கையைச் சேர்ந்த 2 முதியவர்கள் நேற்று அதிகாலை வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் மரைன் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
மரைன் போலீஸார் வந்தபோது கடற்கரையில் இருவரும் மயக்கமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்தனர். இதுகுறித்து மரைன் போலீஸார் அளித்த தகவலைத் தொடர்ந்து, மண்டபத்தில் இருந்து வந்த கடலோரக் காவல் படையினர் மயங்கிக் கிடந்த 2 முதியவர்களையும் ஹோவர் கிராஃட் ரோந்து படகு மூலம் இரட்டைத்தாளை பகுதிக்கு கொண்டு வந்தனர்.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ராமேசுவரம் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விசாரணையில், அவர்கள் இலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் என்ற பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் சிவன்(82), திருகோணமலை மாவட்டம் கோமரங்கடவல் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி(71) என தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT