அதிமுகவைச் சேர்ந்த மணப்பாறை நகராட்சி தலைவர் ராஜினாமா: 55 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு நீடிக்கவில்லை

மணப்பாறை அதிமுக நகர்மன்றத் தலைவர் பா.சுதா நேற்று நகராட்சி ஆணையர் சியாமளாவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
மணப்பாறை அதிமுக நகர்மன்றத் தலைவர் பா.சுதா நேற்று நகராட்சி ஆணையர் சியாமளாவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
Updated on
1 min read

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவர் பா. சுதா நேற்று பதவியை ராஜினாமா செய்தார்.

மணப்பாறை நகராட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் அதிமுக 11 வார்டுகளிலும், திமுக 8 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் 2 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

இதில், அதிமுக, திமுக கூட்டணி ஆகியவை தலா 11 வார்டுகளில் வெற்றி பெற்று சம பலத்தில் இருந்தன. இதையடுத்து, திமுகவில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 பேரும் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதன்பின், அதிமுக நகர்மன்றத் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் எதிர்பாராதவகையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பா.சுதா 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட கீதா மைக்கேல் ராஜூவுக்கு 12 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது நகர்மன்றம் பொறுப்பேற்று 3 மாதங்களை கடந்த நிலையில், திமுக கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் துணைத் தலைவர் தேர்தலும், நகர்மன்றக் கூட்டமும் நடைபெறவில்லை. இதனிடையே அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் நகர்மன்ற கூட்டத்தை நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், திமுக கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், நகர்மன்றத் தலைவர் பா.சுதா, சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, அதற்கான கடிதத்தை நகராட்சி ஆணையர் சியாமளாவிடம் நேற்று அளித்தார்.

மணப்பாறை நகராட்சியை 55 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக கைப்பற்றியிருந்தது. எனினும் அந்த வாய்ப்பு நீடிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in