

மதுரை: கண் புரையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு தாய்லாந்தைச் சேர்ந்த பல்கலைக்கழக கால்நடை மருத்துவக் குழுவினர் 2-வது நாளாக நேற்றும் சிகிச்சை அளித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி(26). இதற்கு 2016-ல் இடது கண்ணில் புரை ஏற்பட்டு பார்வை பாதிக்கப்பட்டது. தற்போது வலது கண்ணிலும் பரவியதால் பார்வையிழப்பால் யானை சிரமப்படுகிறது.
யானைக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற தாய்லாந்து மருத்துவர்கள் வீடியோகான்பரன்ஸ் மூலம் கடந்த 9 மாதங்களாக சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில், ஜூன் 26-ம்தேதி (நேற்று முன்தினம்) தாய்லாந்து நாட்டில் உள்ள கசிசார்ட் பல்கலைக்கழக கால்நடை இணை பேராசியர் நிக்ரோன் தோங்திப் தலைமையில் 7 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், கோயிலுக்கு வந்து யானையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அக்குழுவினரோடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை செய்தார்.
இதனிடையே தாய்லாந்து மருத்துவக் குழுவில் இடம் பெற்றுஉள்ள அசாமைச் சேர்ந்த பாரம்பரிய நாட்டு மருத்துவர் சர்மா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் 2-வது நாளாக நேற்றும் சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் இருந்து கண் பரிசோதனை செய்வதற்காக பிரத்யேகக் கருவிகள் கொண்டுவரப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன. இதில் கண்ணில் உள்ள லென்ஸில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.
மேலும் அறுவை சிகிச்சை செய்யாமல் குணமாக்கவும், பார்வையிழப்பு ஏற்படாமல் கட்டுப்படுத்தும் வகையிலும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கண்களில் உள்ள கிருமிகள் பாதிப்பு குறித்தும் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இப்பரிசோதனை அறிக்கை முடிவுகள் வந்த பிறகு அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அப்போது கோயில் துணை ஆணையர் ஆ.அருணாசலம், மதுரை மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் நடராஜ குமார், உதவி இயக்குநர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.