

சென்னை: தமிழகத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அரசு அமைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மகளிருக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டே இருப்பது வேதனை அளிக்கிறது. மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு என்ற செய்தி பெற்றோருக்கு கவலைஅளிக்கிறது.
பாலியல் வழக்குகளில் தவறு செய்பவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தூக்குத் தண்டனை என்றாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
போக்சோ சட்டத்தின் கீழ்100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள மாவட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு பிரத்யேக நீதிமன்றமாவது அமைக்க வேண்டும். 300-க்கும் மேற்பட்ட வழக்குகள்உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 பிரத்யேக நீதிமன்றமாவது அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
போக்சோ சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்க திண்டுக்கல், தருமபுரி, தேனி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவை இன்னும் அமைக்கப்படவில்லை. அவற்றை உடனடியாக அமைக்க வேண்டும்.
வழக்கின் தேக்கம் என்பது பாதிக்கப்பட்டவர் மற்றும் குடும்பத்தின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே போக்சோ வழக்குகளை விரைவாகவும் திறமையாகவும் தீர்ப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் நீதிமன்றத்துக்கும் உண்டு. மாநிலத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு இடம் இல்லாத நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.