Published : 28 Jun 2022 05:49 AM
Last Updated : 28 Jun 2022 05:49 AM
சென்னை: விபத்துகள், விபத்து உயிரிழப்புகள், போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்க போக்குவரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்றுமுதல் (திங்கள்) வரும் 3-ம் தேதி வரை ஒலி மாசு (ஒலி எழுப்பாமை) விழிப்புணர்வு வாரத்தை தொடங்கி உள்ளனர்.
அதன்படி, சென்னை அசோக் பில்லர் அருகே ஒலி மாசு விழிப்புணர்வு முகாமை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்து பலூன்களை பறக்கவிட்டார். தொடர்ந்து வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகம் அருகில் ஈவெரா சாலை - ஈவிகே சம்பத் சாலை சந்திப்பில் உள்ள சிக்னலில் போக்குவரத்து பிரச்சார வாகனத்தின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். வரும் 3-ம் தேதி வரை சென்னை நகரின் பல்வேறு சந்திப்புகளில் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
முன்னதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாகனங்களில் அதிக ஒலி எழுப்புவதன் மூலம் ஒலி மாசு ஏற்படுகிறது. சாலை போக்குவரத்தில் ஒழுங்கு முறையை ஏற்படுத்த, சென்னையின் 100 சாலைகளில் ஒலி மாசு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். பள்ளிகளில் ஓவியப் போட்டிகளை நடத்த உள்ளோம்.
ஒலி மாசு தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீஸார் வழக்குகளை அதிகளவில் பதியவில்லை. இனிமேல் வழக்கு போட வசதியாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து ஒலி மாசு கண்டறியவதற்காக நவீன கருவிகளை வாங்க உள்ளோம். அதிக ஒலி எழுப்பும் வாகன ஓட்டிகளுக்கு இதுவரை ரூ.100 மட்டுமே அபராதம் விதித்து வருகிறோம்.
இனி ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளோம். வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பொருத்தும் மெக்கானிக், வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர், இணை ஆணையர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT