Published : 28 Jun 2022 05:53 AM
Last Updated : 28 Jun 2022 05:53 AM
சென்னை: மெட்ரோ ரயில் கதவுக்கு நடுவே கைக்குழந்தையுடன் பெண் பயணி சிக்கிய விவகாரம் குறித்து, மெட்ரோ ரயில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரியா என்பவர் தனது கைக்குழந்தையுடன் கடந்த சனிக்கிழமை இரவு சென்னை உயர் நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து புதுவண்ணாரப்பேட்டைக்கு செல்வதற்காக கைக்குழந்தை, 2 உறவினர்களுடன் வந்தார்.
உயர் நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் ஏற முற்பட்டபோது, திடீரென ரயிலின் தானியங்கி கதவு மூடியது.
இதில், பிரியா தனது கைக்குழந்தையுடன் கதவுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டார். அப்போது பயத்தால் அலறினார். இதைக் கண்ட சக பயணிகள் பிரியாவை உள்ளே இழுத்தனர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பின்னர், புதுவண்ணாரப்பேட்டை ரயில் நிலையத்துக்குச் சென்று இறங்கிய பிரியா மற்றும் அவரது உறவினர்கள் ரயில் ஓட்டுநரிடம் முறையிட்டனர். ஆனால், அவர் முறையாக பதில் அளிக்காமல் சென்றுவிட்டார். இதையடுத்து, அவர்கள் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர். அவர்களும் சரியான பதில் அளிக்கவில்லை.
இதனால், ஆத்திரம் அடைந்த பிரியா மற்றும் உறவினர்கள் ரயில் நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.
இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினரும், மெட்ரோ ரயில் அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT