Published : 28 Jun 2022 06:24 AM
Last Updated : 28 Jun 2022 06:24 AM
சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே அறநிலையத் துறை கோயில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் மேற்கொள்ளப்பட்ட அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்தும், இதுதொடர்பான விதிகளை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வில் இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அறங்காவலர்கள் உள்ள கோயில்களில் அவர்கள் மூலமாகவே இந்த நியமனங்கள் நடைபெறுகின்றன. அறங்காவலர்கள் இல்லாத கோயில்களில், அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட தக்கார்கள் மூலமாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படுகின்றனர்” என்று விளக்கம் அளித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்” என்று கூறி, அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை முடித்து வைத்தனர்.
மேலும், “இந்த நியமனங்களால் பாதிக்கப்பட்டதாக கருதும் நபர்கள் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்து பரிகாரம் தேடலாம்” என்றும் நீதிபதிகள் கூறினர். அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை அடுத்தகட்ட விசாரணைக்காக தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT