Published : 28 Jun 2022 06:16 AM
Last Updated : 28 Jun 2022 06:16 AM
தூத்துக்குடி: டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தியும், சாலை வசதி கோரியும் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர்- புன்னைக்காயல் சாலையில் நியாயவிலைக் கடை அருகேயுள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும். சேர்ந்தபூமங்கலம் ஊராட்சி பகுதியில் உள்ள செல்வன்புதியனூர்- புதுநகர்- தலைப்பண்ணையூர் சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் செல்வன்புதியனூர், குமாரப்பண்ணையூர், புதுநகர், ஆவரையூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50 பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் நேற்று தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே காலை 10-45 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததைய டுத்து ஏடிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. கலால் உதவி ஆணையர் செல்வநாயகம், டாஸ்மாக் உதவி மேலாளர் கோபாலாகிருஷ்ணன், திருச்செந்தூர் வட்டாட்சியர் சுவாமிநாதன், டிஎஸ்பி ஆவுடையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செல்வன்புதியனூர்- குமாரப்பண்ணையூர் வரையுள்ள 500 மீட்டர் சாலை அமைக்கும் பணி ஜூலை 15-ம் தேதி தொடங்கும். மீதமுள்ள செல்வன்புதியனூர்- புதுநகர் சாலை செப்டம்பர் மாதம் அமைக்கப்படும். மேலும் டாஸ்மாக் கடை ஜூலை 15-ம் தேதி மூடப்படும். அதுவரை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பாதுகாப்புடன் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் மாலை 3.45 மணியளவில் போராட்டத்தை கைவிட்டனர். மறியலால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. வாகனங்கள் அனைத்தும் குரும்பூர், ஏரல், முக்காணி வழியாக திருப்பி விடப்பட்டன.
டாஸ்மாக் கடை: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு செவல்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் மதுபானக்கடை உள்ள நிலையில் மேலும் ஒரு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது.
இதன் அருகே பிரசித்திபெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. மதுக்கடையால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே டாஸ்மாக் மதுபான கடையை நகருக்கு வெளியே வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT