Published : 28 Jun 2022 06:14 AM
Last Updated : 28 Jun 2022 06:14 AM

மானூர் அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க மறுப்பு: ஆசிரியர் பற்றாக்குறை எனக் கூறுவதாக புகார்

மானூர் தாலுகா வன்னிக்கோனேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட மேசியாபுரம் மக்கள் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அந்தந்த பகுதியிலேயே பணி வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். படம்: அ. ஷேக்முகைதீன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வே. விஷ்ணு தலைமையில் மக்கள்குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

அப்போது மானூர் தாலுகா வன்னிக்கோனேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட மேசியாபுரம் மக்கள்அளித்த மனுவில், “ வன்னிக்கோனேந்தல் ஊராட்சி மக்களுக்கு அந்தந்த பகுதிகளிலேயே ஊரக வேலை திட்டப்பணிகளை வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே இருமுறை மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஊரக வேலை திட்டப்பணிகள் கிடைக்காததால் வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் சங்க மானூர் ஒன்றிய செயலாளர் டி. ஆபிரகாம் உள்ளிட்டோர் அளித்த மனுவில், “குழந்தைகளை மானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க சென்றால், சேர்க்கைமறுக்கப்படுகிறது. தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இல்லைஎன்று காரணம் சொல்லப்படுகிறது.

இப்பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமமுக மாவட்டச் செயலாளர் துரைப்பாண்டியன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், “சிவந்திப்பட்டி முத்தூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அப்பகுதி வழியாக தெற்கு காரசேரியில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் நேரிட்டு வருகின்றன.

லாரிகளில் இருந்து கற்கள் சாலைகளில் விழுவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. சிவந்திப்பட்டி, முத்தூர், காமராஜ நகர் சாலைகளில் லாரிகளுக்கு தடை விதிக்கவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், மதிமுக மாவட்டச் செயலாளர் ரைமண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி முத்துவளவன், மனிதநேய மக்கள் கட்சிமாவட்டச் செயலாளர் ரசூல்மைதீன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் உதயகுமார் கூறும்போது, “கூடங்குளத்தில் 3, 4, 5, 6-வது அணுஉலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. பணி நடைபெறும் வளாகத்தைச் சுற்றி கடலுக்குள் 1.5 கி.மீ. தூரத்துக்கு இரு தூண்டில் பாலம் அனுமதி இல்லாமல் அமைத்துள்ளனர்.

கூடங்குளம்அணுமின் நிலைய வளாகத்தில் 156 ஏக்கர் செயற்கை நிலப்பரப்பு கடலுக்குள் உருவாக்கப்பட்டுள்ளது. கடற்கரை ஒழுங்காற்றுமேலாண்மை சட்டத்துக்கு எதிராகவும், மாசு கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதியின்றியும் இதுஅமைக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புபோராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட 63 வழக்குகள் இதுவரை ரத்துசெய்யப்படவில்லை. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

திருநெல்வேலி வேய்ந்தான் குளம் புதிய பேருந்து நிலைய பூங்காவில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x