

கோடைகாலத்தில் குழந்தைகள் நிரம்பி காணப்படும் காந்தி அருங்காட்சியகம், இந்த ஆண்டு கடுமையான வெயில் மற்றும் தேர்தல் காலத்தால் குழந்தைகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் கோடை காலங்களில் பயனுள்ள வகையில் விடுமுறையை செலவிட மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் ஓவியம், பெயிண்டிங் போன்ற சிந்தனை திறனை உருவாக்கும் பயிற்சிகளும், சுயவேலைவாய்ப்பு, கராத்தே, சிலம்பம் போன்ற பயிற்சிகள் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தன. மதுரை நகர்ப்பகுதியில் உள்ள ஏராளமான பள்ளி மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வர். இதனால் கோடை விடுமுறை முடியும் வரையில் காந்தி அருங்காட்சியகம் குழந்தைகள் நிரம்பி வழியும். குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோரும் என அதிக கூட்டம் இருக்கும்.
ஆனால் தற்போது கடுமையான வெயிலும், தேர்தல் காலமும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் இந்த ஆண்டு காந்தி அருங்காட்சியகத்தில் எந்த பயிற்சிகளும் வழங்கப்படவில்லை. இதனால் கோடை விடுமுறை என்றாலே குழந்தைகள் குதூகலமாக இருக்கும் காந்தி அருங்காட்சியம் விடுமுறை விடப்பட்ட பள்ளிகளை போலவே தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுகுறித்து அருங்காட்சியக ஊழியர்கள் கூறியது:
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் குழந்தைகள், பெண்கள் சுமார் 2 ஆயிரம் பேர் வரை பயிற்சியில் கலந்துகொள்வர். புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு செல்வர். இதனால் குழந்தைகளை போலவே நமக்கும் சந்தோஷமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பெரியவர்களே வெளியில் செல்ல முடியவில்லை. குழந்தைகளால் எப்படி வெயிலை தாங்கி கொள்ள முடியும். மேலும் தேர்தல் நேரம் என்பதால் குழந்தைகளை ஒரே இடத்தில் வைத்திருப்பதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே குழந்தைகளின் நலனுக்காக இந்த ஆண்டு எந்த பயிற்சிகளும் வழங்கவில்லை. அடுத்த ஆண்டு வழக்கம் போல பயிற்சிகள் வழங்கப்படும் என்றனர்.