Last Updated : 28 Jun, 2022 02:57 AM

 

Published : 28 Jun 2022 02:57 AM
Last Updated : 28 Jun 2022 02:57 AM

'ஆட்சியை கவிழ்ப்பது, கட்சிகளை உடைக்கும் வேலைகளை செய்கிறது பாஜக' - முத்தரசன் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: மக்களை மறந்து ஆட்சிகளைக் கவிழ்ப்பது, கட்சிகளை உடைக்கும் வேலைகளை பாஜகவினர் செய்து வருகின்றனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் மாவட்ட மாநாடு நேற்று தொடங்கியது. அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே கட்சியின் மாவட்ட செயலாளர் மு.மாதவன் தலைமையில் நேற்று (ஜூன் 27) இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், "மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்ற பொறுப்புகளுக்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் யாரும் இடதுசாரி கட்சிகளுக்கு வருவதில்லை. மாறாக, சமூகத்தை மாற்றவும், ஏழை எளிய குடும்பத்தினரின் வாழ்க்கையை பாதுகாக்கவுமே இணைகின்றனர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் உட்பட நாடு முழுவதும் எல்லாவற்றிலும் ஒரே முறையே இருக்க வேண்டும் என்று கூறி வருகிறது. நாட்டில் ஏழை, பணக்காரன், வீடின்றி நடைபாதையில் குடும்பம் நடத்துவோர், மாட மாளிகையில் வாழ்வோர் என்ற இருவேறு வாழ்க்கை முறை இந்தியாவில் உள்ளது. இதை மாற்றிவிட்டு ஒரே நாடு, ஒரே வாழ்க்கை முறையை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். இதை செய்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளதா?.

மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு 16 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஆனால், 2 முறை மட்டுமே விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்கிறது. மத்தியில் ஆள்வது நாட்டில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கான ஆட்சி இல்லை. குறிப்பிட்ட சில நபர்களுக்கான ஆட்சிதான் நடக்கிறது. இந்தியாவில் பாஜக ஆட்சி காலத்தில் யாரும் அச்சமின்றி வாழ முடியவில்லை.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிதான் இந்தியாவிலும் வரும். அந்த நாட்டில் ஏற்பட்ட போராட்டத்தைப் போன்று நம் நாட்டில் ஏற்பட்டால் என்ன செய்வது. ஏற்கெனவே, வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஒன்னேகால் ஆண்டு டெல்லியில் போராட்டம் நடந்ததை மறந்துவிட முடியாது.

தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சிதான். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர்களெல்லாம் சுயமாக சிந்தித்தார்கள். மத்திய அரசை எதிர்த்து போராடினார்கள். அதன்பிறகு, சுயமாக செயல்பட முடியவில்லை. ஓபிஎஸ், இபிஎஸ்ஸூக்குமான சண்டையை கிளப்பி பிளவுபடுத்த பாஜக திட்டமிடுகிறது. மக்களை மறந்து ஆட்சியை கவிழ்ப்பது, கட்சியை உடைப்பது போன்ற வேலையை பாஜகவினர் செய்துவருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக அறந்தாங்கி சோதனைச்சாவடியில் இருந்து பொதுக்கூட்ட திடல் வரை சிவப்பு உடை அணிந்து பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x