Last Updated : 28 Jun, 2022 02:14 AM

 

Published : 28 Jun 2022 02:14 AM
Last Updated : 28 Jun 2022 02:14 AM

வளர்ப்பு நாய்க்கு படையல் போட்டு வழிபாடு - 9 ஆண்டுகளாக தொடரும் ராசிபுரம் தம்பதிகளின் அன்பு

நாமக்கல்: ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டியை சேர்ந்த தம்பதியினர் தங்களது வளர்ப்பு நாய் இறந்த தினத்தன்று அதன் படத்தை வைத்து படையல் போட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளாக இதை மேற்கொள்வது கிராம மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்து.

ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் தனியார் பேருந்து நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி. தனது உறவினர் ஒருவரின் மூலம் நாய் குட்டி ஒன்றை வாங்கி வந்துள்ளார். அதற்கு ஜானி என பெயரிட்டு கணவன், மனைவியும் செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ஜானி வயது முதிர்வு காரணமாக இறந்தது. எனினும், வளர்ப்பு நாயை பிரிந்த ஏக்கத்தில் இருந்த கணவன், மனைவியும் கடந்த 9 ஆண்டுகளாக நாய் இறந்த தினத்தில் அதன் படத்தை வைத்து படையல் போட்டு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதுகுறித்து நடராஜன், வளர்மதி தம்பதியினர் கூறுகையில், "ராசிபுரத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவரின் மூலமாக குட்டியாக இருக்கும் போது ஜானி நாய்க்குட்டியை வாங்கி வந்தோம். நாய் இருந்தால் வீட்டிற்கு ஒரு பாதுகாப்பாய் இருக்கும் என்பதால் அதனை வளர்த்து வந்தோம். ஆண்டுகள் நகர, நகர ஜானியின் எங்களின் குழந்தை போல் ஆகியது. அதை செல்லப் பிள்ளையாக வளர்த்து வந்தோம். ஏதேனும் மனதுக்கு கஷ்டமாக இருக்கும் போது அழுதால், முத்தமும் கொடுக்கும். கணவர் என்னை அடிக்க விளையாட்டாக கையை ஓங்கினால் கூட ஜானி என்னை பாதுகாக்கும்.

ஜானிக்கு 13 வயதிருக்கும்போது வயது முதிர்வால் இறந்துவிட்டது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ஜானி இறந்தது. வீட்டின் பின்புறம் ஜானியை புதைத்து அங்கு சீத்தாப்பழம் நட்டு வைத்துள்ளோம். அம்மரம் நன்கு காய்பிடிப்பை தருகிறது. ஜானி பிரிவை தாங்க முடியவில்லை. அதனால் ஜானி இறந்த தினத்தன்று படையல் வைத்து பூஜை செய்து வருகிறோம். இதன்படி 9ம் ஆண்டாக இந்தாண்டும் வழக்கம் போல் தேங்காய், பழம், முறுக்கு, பிஸ்கெட், சாப்பாடு என ஜானி விரும்பி சாப்பிடும் உணவை இலையில் படையல் போட்டு வழிபாடு நடத்தப்பட்டது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x