Last Updated : 27 Jun, 2022 11:08 PM

 

Published : 27 Jun 2022 11:08 PM
Last Updated : 27 Jun 2022 11:08 PM

“பறிகொடுத்த மாநில உரிமைகளை  மீட்டெடுக்கவே பணியாற்றுகிறோம்” - ஆளுநர் தமிழிசை பேச்சு

படம் எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: ஆளுநராக எப்போதும் தனியாக சுயநலமாக செயல்படவில்லை, அதிகாரத்தை கையில் எடுக்கவில்லை. இணைந்து பணியாற்றுவதில் தான் விருப்பம். சில பிரச்சினைகளால் பறிகொடுத்த புதுவையின் மாநில உரிமைகளை மீட்டு எடுக்கவே பணியாற்றுகிறோம் என்று என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ரங்கசாமி முதல்வராக மே 7-ம் தேதி பதவியேற்றார். அதைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக அமைச்சரவை அமைக்கப்படாமல் இருந்தது. இறுதியில் ஒரு சுமூக உடன்பாடு ஏற்பட்டு என்ஆர்.காங்கிரசில் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, பாஜகவில் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பரிந்துரைக்கப்பட்டு 50 நாட்களுக்கு பிறகு ஜூன் 27-ல் பதவியேற்றனர்.

புதுவை அமைச்சரவை பதவி ஏற்று ஓராண்டு நிறைவு செய்ததுள்ளதன் பாராட்டு விழா புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை (ஜூன் 27) நடைபெற்றது. இதற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை வகித்தார். முதல்வர் ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார், பேரவை துணைத் தலைவர் ராஜவேலு உள்பட ஆளும் கட்சி கூட்டணி எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர். எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவில்லை.

விழாவில் ஓராண்டை நிறைவு செய்த முதல்வர், அமைச்சர் உள்ளிட்டோருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி ஆளுநர் தமிழிசை பேசியதாவது: "புதுவை மாநில வளர்ச்சிக்கு அனைத்து தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும். நேர்மறையான, சுமூகமான, நட்புறவுடன் கூடிய நிர்வாகத்தை நாம் மேற்கொண்டு, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தவே அனைத்து தரப்பினரின் சந்திப்பு அமைய வேண்டும். மேலும் பல திட்டங்கள் நமக்கு வருகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சேர்ந்து பயன்தர வேண்டும்.

ஆளுநராக, எப்போதும் தனியாக, சுயநலமாக செயல்படவில்லை, ஆளுநர் அதிகாரம் செலுத்துவதாக சிலர் தவறாக பேசுவது வருத்தமளிக்கிறது. தமிழ் மக்களுக்காக, மொழி தெரிந்த மாநிலத்தில் நமது மக்களுக்காக பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். எந்தவிதத்திலும், அனைவருடனும் இணைந்தே பணியாற்ற விரும்புகிறேன். அதிகாரத்தை கையில் எடுத்ததில்லை. புதுவை மாநில வளர்ச்சியே முக்கியம், தற்போது நல்லாட்சியே நடக்கிறது. நல்ல திட்டங்கள், முடிவுகள் வரவிருக்கின்றன.

சில பிரச்சினைகளால் பறிகொடுத்த புதுவையின் மாநில உரிமைகளை மீட்டு எடுக்கவே பணியாற்றுகிறோம். எந்த உரிமையையும் விட்டுக்கொடுக்கவில்லை. மத்திய அரசு அதிகாரிகள் புதுச்சேரி வரவிருக்கின்றனர். உள்துறை அமைச்சகம் நமது கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்கிறது. நேர்மறை எண்ணங்களோடு நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். சிறந்த, விரைந்த மற்றும் முதன்மையான புதுச்சேரியை ஏற்படுத்த வேண்டும்" என்று தமிழிசை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் மதிய விருந்து ராஜ்நிவாஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சகோதர பாசம்

ஆளுநர் தமிழிசை பேசும் போது, முதல்வர் ரங்கசாமியை "அண்ணன்" என்றே அழைத்தார். அதேபோல் அமைச்சர் நமச்சிவாயத்தை "தம்பி" என்றே குறிப்பிட்டார். முதல்வர் ரங்கசாமியும் தமிழிசையை," சகோதரி" என்றே குறிப்பிடுகிறார். அமைச்சர் நமச்சிவாயமும் பேசும் போது, "அக்கா" என்றே குறிப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x