டெங்கு அலர்ட்: மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல் 

டெங்கு அலர்ட்: மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல் 
Updated on
1 min read

சென்னை: டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடுத்து வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் இந்தாண்டு மே மாதம் வரை 2,548 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் கரோனா தொற்றும், மற்றொரு புறம் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சுகாதாரத் துறைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் "சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. அடுத்து வரும் மாதங்களில் மழைப் பொழிவு இருக்கும் என்பதால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், மாவட்ட சுகாதார இயக்குநரகத்துக்கு தகவல் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். அண்டை மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் டெங்கு பரவல் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதுகுறித்த விவரங்களை மாவட்ட துணை சுகாதார இயக்குநருக்கு தெரிவிப்பது அவசியம்.

நோய்களைப் பரப்பும் கொசுக்கள் மற்றும் லார்வா உற்பத்தி குறித்து கண்காணிக்க வேண்டும். வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லூரிகள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் தனித்தனியே விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழை நீர் தேங்காத வகையில் கழிவுகளை அப்புறப்படுத்துமாறு அவர்களை அறிவுறுத்த வேண்டும்

தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், நிலவேம்பு குடிநீர் விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்" என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in