ஓசூர் | பெற்றோரால் கைவிடப்பட்ட இரு பச்சிளங்குழந்தைகள் பராமரிப்புக்குப் பின் காப்பகத்தில் ஒப்படைப்பு

ஓசூர் அரசு மருத்துவமனையில் பெற்றாரால் கைவிடப்பட்ட இரண்டு குழந்தைகளை  கிருஷ்ணகிரி மாவட்ட அரசு குழந்தைகள் காப்பக பணியாளரிடம் ஒப்படைத்த ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி. உடன் தலைமை மருந்தாளுநர் ராஜசேகர், மருத்துவர்கள், செவிலியர்கள். |  படங்கள்: ஜோதி ரவிசுகுமார்.
ஓசூர் அரசு மருத்துவமனையில் பெற்றாரால் கைவிடப்பட்ட இரண்டு குழந்தைகளை  கிருஷ்ணகிரி மாவட்ட அரசு குழந்தைகள் காப்பக பணியாளரிடம் ஒப்படைத்த ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி. உடன் தலைமை மருந்தாளுநர் ராஜசேகர், மருத்துவர்கள், செவிலியர்கள். | படங்கள்: ஜோதி ரவிசுகுமார்.
Updated on
1 min read

ஓசூர்: ஓசூர் அரசு மருத்துவமனையில் பிறந்து சில மணி நேரங்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட ஒரு பெண் பச்சிளங்குழந்தை மற்றும் ஓர் ஆண் பச்சிளங்குழந்தையை காப்பாற்றி பராமரித்து வந்த அரசு மருத்துவ குழுவினர், அந்த இரண்டு குழந்தைகளையும் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

ஓசூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 3 மற்றும் மே 16 ஆகிய தேதிகளில் பிறந்த சில மணி நேரத்தில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டு பச்சிளங்குழந்தைகள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஓசூர் அரசு மருத்துவமனையில் நலமாக உள்ள இரண்டு குழந்தைகளையும் மேலும் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்க ஏதுவாக ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி, மாவட்ட அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். இந்த இரண்டு குழந்தைகளையும் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு குழந்தைகள் காப்பக மைய பணியாளர் சு.சிவானந்தம் பெற்றுக்கொண்டார்.

இதுகுறித்து ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி கூறும்போது, ''அரசு மருத்துவமனையில் கடந்த 65 நாட்களுக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை மற்றும் 45 நாட்களுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தை ஆகிய இரண்டு குழந்தைகளையும் பெற்றோர்கள் கைவிட்ட நிலையில் பச்சிளங்குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவ குழுவினரால் மீட்கப்பட்டு சிகிச்சை அளித்தும், தாய்மார்களிடம் தாய்ப்பால் பெற்று அதை குழந்தைக்கு பால் கொடுத்தும் காப்பாற்றி வந்தோம்.

இதில் ஆண் குழந்தைக்கு பார்வை குறைபாடு இருப்பது தெரியவந்ததால், கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில் லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது 1 கிலோ 900 கிராம் எடையுடன் ஆண்குழந்தை நலமாக உள்ளது. அதேபோல 1 கிலோ 800 கிராம் எடையுடன் பெண் குழந்தையும் நலமாக உள்ளது.

இந்த பெற்றோரால் கைவிடப்பட்ட 2 குழந்தைகளையும் காப்பாற்றும் பணியில் பச்சிளங்குழந்தைகள் அவசர பிரிவில் உள்ள மருத்துவர்கள் ராஜசேகர், சக்திவேல், அசோக், விஜயன் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்'' என்று அவர் கூறினார். அப்போது அரசு மருத்துவமனை தலைமை மருந்தாளுநர் ராஜசேகர் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in