

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு தாய்லாந்து மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க உள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி (26) இரு கண்களிலும் புரையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை அளிக்க தாய்லாந்து நாட்டில் உள்ள கசிசார்ட் பல்கலைக்கழக கால்நடை இணை பேராசிரியர் நிக்ரோன் தோங்திப் தலைமையில் 7 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் நேற்று மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து யானையைப் பார்த்தனர்.
அக்குழுவினரோடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து ஆலோசனை செய்தார். அப்போது ஆட்சியர் அனீஷ்சேகர், மேயர் இந்திராணி, கோயில் துணை ஆணையர் ஆ.அருணாசலம் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் கூறியதாவது: 2016-ல் கோயில் யானை பார்வதிக்கு இடது கண்ணில் பார்வை பிரச்சினை ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள கால்நடை சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முதல் வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
யானைக்கான சிறப்பு மருத் துவர்கள் தாய்லாந்தில் உள்ளனர். இவர்கள் 9 மாதமாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிகிச்சை அளித்தனர். தற்போது தாய்லாந்து நாட்டில் இருந்து 7 பேர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளிக்க வந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் இருந்து பாரம்பரிய நாட்டு மருத்துவர்களும் இணைந்து சிகிச்சை அளிக்க உள்ளனர்.
உலகத்தில் கண் தெரியாத யானைகள் வாழ்ந்ததற்கான வரலாறு இருக்கிறதா என அவர் களிடம் கேட்டேன். கண் தெரி யாத யானைகள் வாழ்வதாகத் தெரிவித்தனர். மேலும் யானைக்கு மூளையும், மோப்ப சக்தியும் அதிகம். தெரிந்த இடத்தில், தெரிந்த பாதையில் வாழும் சூழல் உள்ளது. அதேபோல், பாம்பு கடித்து பார்வையிழந்த குறைந்த வயது யானைகளும் வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர் என்றார்.