புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் படங்கள் கிழிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் படங்கள் கிழித்து எறியப்பட்டன.
ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். புதுவை மாநில அதிமுகவில் கிழக்கு மாநிலம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், மேற்கு மாநிலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் உள்ளது. புதுவை உப்பளம் தலைமை அலுவலகத்தில் இன்று கிழக்கு அதிமுகவினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் கூடினர்.
பின்னர் அவர்கள் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஓ.பன்னீர்செல்வம் படத்தைக் கிழித்தனர். தொடர்ந்து அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் கூறியதாவது: ''திமுகவின் உதவியோடும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணப்படியும், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவுக்கு விரோதமாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் சதிச்செயலை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொண்டர்கள் முறியடித்துள்ளனர்.
கழகத்துக்கு எதிராக, திமுகவின் பி டீமாக செயல்படும் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். இதை தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு புதுவை அதிமுக சார்பில் வேண்டுகோளாக வைக்கிறோம். ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக பதவியேற்க கிழக்கு மாநில அதிமுக முழு ஆதரவை தருகிறது. தமிழகம், புதுவையில் கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை நீக்க வேண்டும்.
காரைக்காலில் உள்ள 12 பொதுக்குழு உறுப்பினர்களும், புதுவை கிழக்கு மாநிலத்தின் 23 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் மேற்கு மாநிலத்தில் உள்ள 21 உறுப்பினர்களில் 11 பேர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர். மேற்கு மாநில செயலாளர் உட்பட கையெழுத்திடாத 10 பேரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
