முன்னாள் அமைச்சரின் முறைகேடுகளுக்கு உடந்தை: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசுக்கு தயக்கம் ஏன்? - மநீம கேள்வி

மநீம தலைவர் கமல்ஹாசன்
மநீம தலைவர் கமல்ஹாசன்
Updated on
1 min read

சென்னை: முன்னாள் அமைச்சரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க திமுக அரசு ஏன் தயங்குகிறது என மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விட்டதில் அரசுக்கு ரூ.811 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிகோரி, 7 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடிதம் எழுதியும், இதுவரை ஒப்புதல் வழங்காதது பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து, இனியும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு எந்த அதிகாரியும் துணைபோகாத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.'' இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in