Published : 27 Jun 2022 07:19 AM
Last Updated : 27 Jun 2022 07:19 AM

தமிழகத்தில் சுகாதார உட்கட்டமைப்புக்கு ரூ.404 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

சென்னை: தமிழகத்தில் சுகாதார உட்கட்டமைப்புக்கு ரூ.404 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர், ஆவடியில் அமைக்கப்பட உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான சுகாதார மையத்துக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, அவர் பேசியதாவது: பேறுகால இறப்பு விகிதம், சிசுஇறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில், பிற மாநிலங்களுக்கு முன்பே இலக்கை அடைந்தமைக்காக தமிழகத்துக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 75 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் 11.26 கோடி கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது பாராட்டுக்குரிய சாதனை.

நுண்கிருமியால் பாதிக்கப்பட்டவருக்கு வறுமை, அதனால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டால் காசநோய் ஏற்படவும், நோயின் தீவிரம்அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம்பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், 17 மாவட்டங்களில் மலேரியா பாதிப்பு இல்லை என்பது மகிழ்ச்சிக்குரியு தகவல்.

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவை ஒழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

2030-க்குள் மலேரியாவை முற்றிலும் ஒழிக்க உறுதிபூண்டுள்ளோம். ‘ஒரே தேசம் ஒரே டயாலிசிஸ்’ திட்டத்தை பிரதமர் விரைவில் தொடங்கிவைப்பார். அதன்மூலம், டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளி, நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் அவ்வசதியைப் பெறலாம்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரும் டிசம்பருக்குள் 9,135சுகாதாரம், ஆரோக்கிய மையங்கள்அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஏற்கெனவே உள்ள 7,052 மையங்களில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பொதுவான புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்காக இதுவரை 5.42 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் சுகாதாரத்துக்காக தமிழகத்துக்கு ரூ. 2,600 கோடி, பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உட்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் ரூ. 404 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் பேசினார்.

தமிழக சுகாதார அமைச்சர் மனு

முன்னதாக, அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், ரோபோடிக் தானியங்கி அறுவைசிகிச்சை மையத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார். தொடர்ந்து, இந்திய மகளிர் கால்பந்து வீராங்கனை மாரியம்மாள், குத்துச்சண்டை வீரர் பாலாஜி, பன்முக எலும்பு முறிவு மற்றும் கால் எலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட சிந்து ஆகியோருக்கு அளிக்கப்பட்ட அறுவைசிகிச்சை குறித்து கேட்டறிந்த மத்திய அமைச்சர், சிகிச்சை அளித்த மருத்துவர்களைப் பாராட்டினார்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ப.செந்தில்குமார், உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வீனா, மருத்துவ சேவைக் கழக இயக்குநர் தீபக்ஜேக்கப், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அப்போது, மத்திய அமைச்சரிடம், தமிழக சுகாதாரத் துறை தொடர்பான கோரிக்கை மனுவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர வேண்டும்.

மதுரையில் பிரதமரால் 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்ட வேண்டும். 2022 பிப்ரவரி மாதத்திலிருந்து மதுரை எய்ம்ஸ்-ல்50 மாணவர்கள் சேர்க்கைக்கு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிக இடம் அளித்து, தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.

கோவையில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும். மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான தற்போதைய கலந்தாய்வு முறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளை உடனடியாக நிறுத்தவேண்டும். தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும்.

உக்ரைனில் படித்த மாணவர்கள், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழிவகை செய்ய வேண்டும். வெளிநாட்டில் மருத்துவக் கல்வி படித்த மாணவர்களின் பயிற்சி எண்ணிக்கையை 7.50 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

தமிழகத்தில் 50 துணை சுகாதார நிலையங்களை, ஆரம்ப சுகாதார நிலையங்களாகவும், 25 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, மத்திய அமைச்சர் அண்ணா நகரில் உள்ள மருத்துவ சேவைக் கழக மருந்துக் கிடங்கை ஆய்வு செய்தார். முன்னதாக, தேசிய சுகாதார இயக்கம் சேப்பாக்கத்தில் ஏற்பாடு செய்திருந்த `ஆரோக்கிய இந்தியா-உடல்நல இந்தியா' என்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர், அவரும் சைக்கிள் ஓட்டிப் பங்கேற்றார். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தொடங்கிய பேரணி, கடற்கரைச் சாலை, சுவாமி சிவானந்தா சாலை, மன்றோ சிலை வழியாக மீண்டும் விருந்தினர் மாளிகையை அடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x