

சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: மதுரவாயல்-துறைமுகம் சாலைத் திட்டம், அரசியல்காரணங்களுக்காக கைவிடப்பட்டது. ஆனால், மத்திய பாஜக அரசு, மக்களுக்குப் பயனளிக்கும் பறக்கும் சாலைத் திட்டத்தை தொடங்கி உள்ளது.
சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியைக் கொண்டு, சீர்மிகு சென்னை திட்டத்தை நிறைவேற்றுகின்றனர்.
சென்னை மாநகர மேயராக ஸ்டாலின் இருந்தபோது, சென்னையை சிங்கப்பூராக மாற்றப் போகிறோம் என்றார். ஆனால், இன்றைக்கும் சென்னை கூவமாகத்தான் இருக்கிறது.
பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை, கல்வி, நகை, சுயஉதவிக் கடன்கள் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சமூகநீதிக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சமூகநீதியைப் பின்பற்றுவது பாஜகதான். ஊழல்கள் நிறைந்தது திராவிட மாடல் ஆட்சி. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் சிறிய குற்றம்கூட கூறமுடியாத ஆட்சியை மோடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்..
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை பேசும்போது, ‘‘இந்தியாவில் அசையா சொத்துகளில் 2 சதவீதம் மட்டும்தான் பெண்கள் பெயரில் உள்ளது. எனவே, மத்திய அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ், பெண்களின் பெயரில் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன.
ஊழல் நாடாக இருந்த இந்தியாவை, பிரதமர் மோடி சாதனை நாடாக மாற்றியுள்ளார். ஆனால், தமிழக முதல்வர், குட்டி மோடியாக ஆசைப்படுகிறார். அதற்கு, பிரதமர்மோடியைப்போல அவர் உழைக்கவேண்டும். நேர்மையாக இருக்க வேண்டும். குடும்பத்துக்காக இல்லலாமல், மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் கட்சியும், குடும்பமும் இணைந்துள்ளன. இதை வைத்துக்கொண்டு பிரதமர் மோடியைப் போல வர முடியுமா? நீட், மேகேதாட்டு விவகாரங்களில் அரசியல் செய்து வருகின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் முற்றிலுமாக அழிந்துவிட்டது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றிஎன்பதே நமது இலக்கு. தமிழகத்தில் நிச்சயம் பாஜக ஆட்சி ஏற்படும்’’ என்றார்.
இக்கூட்டத்தில், சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.