Published : 27 Jun 2022 07:05 AM
Last Updated : 27 Jun 2022 07:05 AM
தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் எல்லையைச் சேர்ந்த செங்கல்பட்டு மற்றும்காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாருக்கு உணவுப்படி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் போலீஸார் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழக போலீஸாருக்கு மாதத்துக்கு 6 நாட்கள் வீதம் இரண்டாம் நிலை போலீஸார் முதல் உதவி ஆய்வாளர் வரை நாள் ஒன்றுக்கு ரூ.300 வீதம் உணவுப்படி வழங்குவது வழக்கம்.
அதேபோல் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் போலீஸாருக்கும் உணவுப்படி வழங்கப்படுகிறது. அதற்கான தொகை அந்தந்த போலீஸாரின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 10 முதல்15-க்குள் வரவு வைக்கப்படும்.
இந்நிலையில், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் போலீஸாருக்கு கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை உணவுப்படி வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல் ஈடிஆர் (மிகை ஊதிய நேரம்) வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "தாம்பரம் மாநகர காவல் எல்லை பிரிக்கப்பட்டது முதல் போலீஸாருக்கு கிடைக்க வேண்டி எந்தச் சலுகைகளும் முறையாக கிடைக்கவில்லை. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பணிச்சுமையும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் உணவுப்படி வழங்காததால் போலீஸார் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வழக்கமாக போலீஸாருக்கு கிடைக்க வேண்டிய உணவுப்படியை பெற்றுத்தர புதிய ஆணையர் உரியஆவணம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT