

திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அருகே பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கியதற்கு எதிரான போராட்டத்தை கைவிட்டு சமூக நல்லிணக்கம் காக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஆர்.கே.பேட்டை அருகே உள்ளராஜா நகரத்தில் 27 ஆண்டுகளுக்குமுன்பு 107 பட்டியலின குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைகளை அரசு வழங்கியது. பலகட்ட கோரிக்கைகளுக்குப் பிறகு அவர்களுக்கான மனை கடந்த 2-ம் தேதி அளவீடு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது.
இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த ஒரு பிரிவினர் அளவீட்டு கற்களை அகற்றினர். இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் கோபமடைந்த அந்த பிரிவினர் கடந்த 24-ம் தேதி மரங்களை வெட்டிப்போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குச் சென்ற ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரை சிறைப்பிடித்து தாக்கினர். போலீஸார் மீதும் கல் வீசி தாக்குதல் நடந்தது.
இதையடுத்து காஞ்சி டிஐஜி சத்தியபிரியா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆர்.கே.பேட்டைக்கு வந்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பட்டியலின மக்கள் பொருளாதார வாய்ப்பு ஏதுமில்லாமல் கூலி வேலை செய்து ஒரே வீட்டில்இடநெருக்கடியோடு இரண்டு மூன்று குடும்பங்களாக வசிக்கின்றனர். அவர்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டதை எதிர்ப்பது எப்படி நியாயமாகும்.
வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒன்றுபட்டு போராட வேண்டிய சூழலில், சாதிய பாகுபாடு காரணமாக பிளவுபட்டு நிற்பது உழைக்கும் மக்களுக்குள் பிரிவை ஏற்படுத்தும்.
ஆகவே, ராஜாநகரத்தின் ஒரு பிரிவினர், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைக்கு எதிரான போராட்டத்தை கைவிட்டு சமூக நல்லிணக்கம் காக்க வேண்டும். பட்டியலின மக்களின் வாழ்வாதார உரிமைகளை பாதுகாப்பதற்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.