Published : 03 May 2016 09:57 AM
Last Updated : 03 May 2016 09:57 AM

வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துவிட்டார் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு

முதல்வர் ஜெயலலிதா தனது வேட்புமனுவில் சில சொத்து விவரங்களை குறிப்பிடாமல் மறைத்துவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கேள்வி - பதில் வடிவில் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வர் ஜெயலலிதா தனது பெயரில் சில சொத்து விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என செய்திகள் வருகின்றன. ஒருவேளை அந்த சொத்துக்கள் கட்சிப் பெயரில் வாங்கப்பட்டிருந்தால் கட்சியின் பெயரில் சொத்து வரி கட்டியிருக்க வேண்டும். எத்தனை பெரிய முறைகேடுகளையும் மூடி மறைக்கக் கூடிய சாதுர்யமும், சக்தியும் ஜெயலலிதாவுக்கு உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் தங்களை நேர்மையின் அவதாரங்கள் என்பதுபோல பேசி வருகின்றனர். ஆனாலும், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிலக்கரி இறக்குமதியில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு ஜெயலலிதா இதுவரை பதிலளிக்கவில்லை.

அதிகாரிகள் மாற்றம்

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. பெரு மளவில் பணம் கைப்பற்றப் பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் அதிகாரிகள் இப்போது மாற்றப்பட்டுள்ளனர். தேர்தல் பணிகளுக்காக தனி டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையர், 7 மாவட்ட எஸ்.பி.க் கள், 9 மாவட்ட ஆட்சியர்கள், சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். இதிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக அதிகாரிகளை அதிமுக அரசு பலிகடாவாக்கியது தெரிகிறது.

110-வது விதி

முதல்வர் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தின்போது கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக திரும்பத் திரும்ப தவறாக பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், அளித்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைகூட அதிமுக அரசு நிறைவேற்றவில்லை.

சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் வெளியிடப்பட்ட 187 அறிவிப்புகளில் பெரும் பாலானவை வெறும் அறிவிப்பு களாகவே உள்ளன. ஜெயலலிதா வின் வாக்குறுதிகள் எந்த கதியில் இருக்கிறது என்பது தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நன்கு தெரிந்துள்ளது. எனவே, அதை மறைக்க அவர் முயற் சிப்பது இருட்டு அறையில் கருப்புப் பூனையை தேடுவது போன்றது.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x