

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய பாஜக அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.06, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.94 என உயர்த்தப்பட்டிருப்பது விலைவாசி உயர்வுக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது. ஏற்கெனவே விலைவாசி உயர்வு காரணமாக கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிற மக்கள் மேலும் துன்பப்படுகிற வகையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பாஜக அரசு மத்தியில் ஆட்சியில் அமைந்தபோது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 115 டாலராக இருந்தது. தற்போது 39 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சியின் காரணமாக பெட்ரோல் விலை ரூ.30, டீசல் விலை ரூ.20 என விற்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.61.64 ஆகவும், டீசல் விலை ரூ.51.78 ஆகவும் அதிகரித்துள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.
மத்திய பாஜக அரசின் நிதிநிலை சரியில்லாத காரணத்தால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதன் மூலமாக சரிகட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிதியாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2,500 கோடி டாலராக உயரும் என்று கூறப்படுகிறது. அதேபோல, நிதி பற்றாக்குறையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
இதை எதிர்கொள்வதற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால் ஏற்படுகிற பயன்களை மக்களுக்கு சென்றடையாமல் தடுக்கிற வகையில் விலை உயர்வோடு கலால் வரியை உயர்த்தி அரசு கஜானாவை பாஜக நிரப்பி வருகிறது. இதன்மூலம் வீழ்ச்சி பள்ளத்தில் இருக்கிற பாஜகவின் நிதிநிலைமையை சரிகட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை மக்கள் மீது சுமத்தக்கூடாது என்பதற்காக 2013-14 ஆம் ஆண்டில் மத்திய காங்கிரஸ் அரசு ரூபாய் 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி மானியமாக வழங்கியது. ஆனால் மத்திய பாஜக அரசு விலை வீழ்ச்சியினால் ஏற்படுகிற பயன்களை மக்களுக்கு போய்ச் சேரவிடாமல் தடுக்கிற மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. இதை நாட்டு மக்கள் புரிந்து தமிழக பாஜகவுக்கு உரிய பாடத்தை சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் புகட்டுவார்கள்'' என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.