

மேற்குவங்க முதல்வராக இன்று பொறுப்பேற்க உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று மம்தா பானர்ஜிக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ஜெயலலிதா கூறியிருப் பதாவது:
மே 27-ம் தேதி (இன்று) மேற்கு வங்க முதல்வராக தாங்கள் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க தனிப்பட்ட முறையில் எனக்கு அழைப்பு அனுப்பியதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நடந்து முடிந்த மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகள். தங்களின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என விரும்பினாலும் அரசுப் பணிகள் அதிகமாக இருப்பதால் பங்கேற்க முடியவில்லை.
முதல்வராக பதவியேற்கும் தங்களுக்கும், அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துகள். மேற்குவங்க மாநிலத்தை முன்னேற்றப் பாதை யில் அழைத்துச் செல்ல வாழ்த்து கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.