Last Updated : 23 May, 2016 11:41 AM

 

Published : 23 May 2016 11:41 AM
Last Updated : 23 May 2016 11:41 AM

புதுச்சேரியின் அடுத்த முதல்வர் யார்?

புதுச்சேரியில் அடுத்த முதல்வர் யார்? என்ற எதிர்பார்ப்பு நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது. காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் திமுகவுக்கு இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 17 இடங்களில் வென்றுள்ளது. இதில் காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும் வென்றுள்ளது. திமுக சார்பில் புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளர் சிவா, கீதா ஆனந்தன் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 எம்எல்ஏக்களில், ஆட்சி அமைக்க 16 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். தற்போது, காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஒரே ஒரு இடத்திற்காக கூட்டணி கட்சியான திமுகவை நம்பி காங்கிரஸ் உள்ளது. இதனால், ஆட்சி அமைப்பதில் திமுகவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. எனவே, திமுகவுக்கு அமைச்சரவையில் நிச்சயம் இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என்று அக்கட்சியினர் நம்பிக்கையோடு பேசி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு திமுக அரசுக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்தது. அதே போல் அப்போது புதுச்சேரியிலும் காங்கிரஸ் அரசில் திமுகவுக்கு பிரதி நிதித்துவம் தரப்படவில்லை. ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பான்மை இல்லாத நிலையில் இந்த முறை திமுகவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என திமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, காங்கிஸ் - திமுக கூட்டணியில் புதுச்சேரியின் புதிய முதல்வர் யார்? என்ற பரபரப்பும் தொற்றிக் கொண்டுள்ளது.

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்த பின்னர், புதுச்சேரி காங்கிரஸில் தொய்வு ஏற்பட்டது. இந்த தொய்வு கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு 8 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்து வந்த ஏவிஎஸ். சுப்பிரமணியன் நீக்கப்பட்டு, புதிய தலைவராக நமச்சிவாயம் நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர், நமச்சிவாயம் தலைமையில் அப்போதைய ஆளும் கட்சியான என்ஆர் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. தேர்தலை கணக்கிட்டு கட்சிப் பணிகளிலும் தீவிரம் காட்டப்பட்டன. இதனால் துவண்டு போய் இருந்த புதுச்சேரி காங்கிரஸ் மீண்டும் துளிர் விடத் தொடங்கியது.

காங்கிரஸின் செயல்பாடு, ரங்கசாமியின் ஆட்சிமுறை, மக்களின் மனநிலை எல்லாம் ஒன்று சேர்ந்து தற்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. இதை தலைமையெடுத்துச் சென்றவர் நமச்சிவாயம் என்பதால் அவரை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முதல்வராகும் வாய்ப்பு நமச்சியவாயத் துக்கு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ஏற்கெனவே முதல் வராக இருந்த வைத்திலிங்கத்தின் பெயரும் இதில் அடிபடுகிறது. ஆனால் இதுபற்றி வைத்திலிங்கம் வாய் திறக்கவில்லை. நமச்சிவாயம் சகாக்களுடன் அவர் நல்லுறவையே பேணுகிறார். 'தலைமை விரும்பி கொடுத்தால் ஏற்கலாம்' என்கிற மனநிலையில் அவர் இருப்பதாக தெரிகிறது.

புதுச்சேரி காங்கிரஸை பொறுத்த வரையில் தவிர்க்க முடியாத ஒரு அதிகார மையம் 'நாராயணசாமி' அவருக்கும் சற்றே முதல்வர் ஆசை உண்டு. ஆனால் தேசிய நீரோட்டத்தில் ஐக்கியமான பிறகு இங்கு வந்து இழப்பு நேர்ந்தால்..! அதனால் அவர் இந்தப் போட்டியில் இருந்து தொடக்கம் முதலே விலகி நிற்கிறார்.

சிறுபான்மையினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி காலாப்பட்டு தொகுதியில் வெற்றி பெற்ற ஷாஜகானும் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

'தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கு இம்முறை முதல்வர் வாய்ப்பளிக்க வேண்டும்' என்கிற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. ஏம்பலம் தொகுதியில் வெற்றி பெற்ற கந்தசாமி இதற்காக முயற்சிப்பதாகவும் பேசப்படுகிறது. 'ஒருவேளை காங்கிரஸ் வெற்றி பெற்று தலைமையின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டுவிட்டால் நாம் முதல்வராகி விடுவோம்' என்கிற ஆர்வத்தில் 2011 சட்டப்பேரவை தேர்தலின் போது, கந்தசாமி இந்தி டீயூசனுக்கெல்லாம் சென்று தன் தகுதியை வளர்த்தது பரவலாக பேசப்பட்டது. இப்போதும் அதே ஆர்வத்தோடு அவர் தலைமையை அணுகுவதாக தெரிகிறது.

நேற்று ராஜீவ்காந்தி நினைவுதின நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நமச்சிவாயத்திடம் 'அடுத்த முதல்வர் யார்?' என செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'ஓரிரு தினங்களில் வெற்றி உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்போம்' என்ற ஒற்றை வார்த்தையுடன் முடித்துக் கொண்டார். 'திமுகவிற்கு அமைச்சரவையில் இடம் உண்டா?' என்று கேட்டதற்கு, 'கூட்டத்தை கூட்டிதான் இறுதி முடிவெடுப்போம்' என்று நழுவிக் கொண்டார்.

மேலும், புதிய அமைச்சரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் லட்சுமிநாரா யணன், ஷாஜகான், கந்தசாமி, கமலக் கண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ் போன்றவர்களின் பெயர்கள் அதிகளவு அடிபடுகின்றன. அதோடு சில புதிய முகங்களுக்கும் வாய்ப்புகள் கொடுக் கப்படலாம் என்ற பேச்சும் பரவலாக உள்ளது.

திமுகவிற்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் பட்சத்தில் புதுச்சேரி திமுக அமைப்பாளர் சிவாவிற்கு வாய்ப்பு கிடைக்கலாம். 'பெண் ஒருவர் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டும்' என்ற கருத்தும் வலுத்து வருகிறது. காரைக்கால் பிராந்தியத்திற் குட்பட்ட நிரவி தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற கீதா ஆனந்த், இந்த கருத்திற்கு வலுசேர்த்து அமைச்சராக முயல்வதாகவும் தகவல்கள் வருகின்றன.

இப்படியாக பரபரத்து கிடக்கிறது புதுச்சேரி அரசியல் களம். தேர்தல் முடிவை விட 'முதல்வர் யார்?' அடுத்த அமைச்சர்கள் யார் யார்? என்ற முடிவை எதிர்பார்த்து ஆர்வத்தில் காத்திருக்கின்றனர் புதுச்சேரி மக்கள்.

ஆட்சி அமைப்பதில் திமுகவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. எனவே, திமுகவுக்கு அமைச்சரவையில் நிச்சயம் இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என்று அக்கட்சியினர் நம்பிக்கையோடு பேசி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x