Published : 26 Jun 2022 04:14 PM
Last Updated : 26 Jun 2022 04:14 PM

’ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு நடக்காது’: துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்

தஞ்சை: "ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்காது. நடந்துமுடிந்த பொதுக்குழுவுக்குப் பின்னர், தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு கூடியிருக்கிறது" என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தஞ்சையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு நடக்காது. மதுரை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. பொதுக்குழுவுக்குப் பின்னர், தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு கூடியிருக்கிறது.

பொதுக்குழு உறுப்பினர்கள் இல்லாத ஒரு 600 பேரை முன்னால் உட்கார வைத்துவிட்டார்கள். இவர்கள்தான் பொதுக்குழுவின்போது கூச்சல் போட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் எந்த வார்த்தையும் பேசவில்லை" என்று அவர் கூறினார்.

முன்னதாக, மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ''அதிமுகவின் நிரந்தர எதிரியான திமுகவை எதிர்க்க ஒற்றைத் தலைமையான எடப்பாடி இருந்தால் தான் அதை செய்ய முடியும், திமுக எதிர்ப்பு என்பது அதிமுகவினரின் ரத்தத்தில் ஊறியது.

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை வழிநடத்த வேண்டிய ஓபிஎஸ், 'பராசக்தி வசனத்தை தலைமாட்டில் வைத்து தூங்குவேன்' என யார் மனதை குளிர்விக்கும் வகையில் பேசுகிறார், ரவீந்திரநாத் குமார் திமுக முதல்வரை சந்தித்துப் பேசுகிறார். இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது என பேசி வந்துள்ளார், இது அதிமுகவை சோர்வடைய செய்துள்ளது.

'ஜெயலலிதா மறைவுக்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், சசிகலாவை சேர்க்கக்கூடாது, ஜெயலலிதா இல்லத்தை அரசுடமையாக்க வேண்டும்' என ஓபிஎஸ் விடுத்த கோரிக்கையை ஈபிஎஸ் செய்தார், பிறகு எதற்கு டிடிவி தினகரனோடு ஓபிஎஸ் ரகசிய உறவாடுகிறார்; பேசுகிறார்? சந்தேகமற்ற அப்பழுக்கற்ற தலைமையாக இருக்க வேண்டும். உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், சந்தேக தலைமை வேண்டாம். நம்பிக்கைக்குரிய தலைமையே வேண்டும், தொண்டர்களை ஓபிஎஸ் கைவிட்டுவிட்டார்.

தொண்டர்கள் என்ற புனிதச்சுமையை சுமப்பதற்கு ஓபிஎஸ் தயாராக இல்லை, தனது குடும்பத்தின் நலன் மீது மட்டுமே ஓபிஎஸ் அக்கறை காட்டினார். ஓபிஎஸ் கட்சி நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை கொடுத்து இருப்பார்'' என்று கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x