Last Updated : 26 Jun, 2022 09:30 AM

 

Published : 26 Jun 2022 09:30 AM
Last Updated : 26 Jun 2022 09:30 AM

புதிதாகத் திறக்கப்பட்ட அதிமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அலுவலகம் யாருக்கு? - தொண்டர்களிடையே குழப்பம்

தஞ்சாவூர் சிவாஜி நகரில் பூட்டப்பட்டுள்ள அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுகவுக்கு கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு 10 நாட்களே ஆன நிலையில், கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், தற்போது அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் தினமும் அலுவலகத்துக்கு வந்து, பூட்டப்பட்ட அலுவலகத்தை பார்த்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

அதிமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்துக்கு தஞ்சாவூர் சிவாஜி நகரில் மாவட்ட அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு ஜூன் 13-ம் தேதி திறக்கப்பட்டது. அதே நாளில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்துக்கு கும்பகோணத்தில் சாந்தி நகரில் நிரந்தர மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது.

இந்த 2 அலுவலகங்களையும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் திறந்து வைத்தார். தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், துணை ஒருங்கிணைப்பாளரான ஆர்.வைத்திலிங்கம், ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளார்.

ஆனால், வைத்திலிங்கத்தின் ஆதரவாளராக இருந்தவரும், தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவருமான ஆர்.காந்தி தலைமையில் ஒன்றியச் செயலாளர் துரை.வீரணன், முன்னாள் பகுதிச் செயலாளர் சரவணன், வடக்கு மாவட்டத்தில் கும்பகோணம் முன்னாள் எம்எல்ஏ ராம.ராமநாதன் உட்பட ஏராளமானோர் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, ஜூன் 22-ம் தேதி முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சார்பில் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதைப் பார்த்த வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு வந்தார். அப்போது, அவருக்கு எப்போதும் இல்லாத வகையில் 100 கார்களில் சென்று அவரது ஆதரவாளர்கள் மாநகர எல்லையில் வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து, அவர் கட்சி அலுவலகத்துக்குச் செல்வார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் அங்கு செல்லாமல், ஓட்டலுக்குச் சென்று தங்கினார். அங்கு தனது ஆதரவாளர்களுடன் கட்சி நிலவரம் குறித்து ஆலோசித்தார். மேலும், தற்போது கட்சி அலுவலகம் பூட்டப்பட்டுள்ள நிலையில், தொண்டர்களும் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியது: தஞ்சாவூரில் முக்கிய நிர்வாகிகள் பலரிடமிருந்து நிதி பெறப்பட்டு, கட்சிக்கு புதிதாக அலுவலகம் கட்டப்பட்டது. ஆனால், அதன்பின் கட்சிக்குத் தொடர்பில்லாத சிலர் அலுவலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சகஜமாக கட்சி அலுவலகத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தான், நிர்வாகிகள் சிலர் வைத்திலிங்கத்துக்கு எதிராக பழனிசாமிக்கு ஆதரவைத் தெரிவித்தனர்.

தற்போது கட்சியின் அலுவலகம் பூட்டியே உள்ளதால், அலுவலகத்துக்கு வரும் தொண்டர்கள் ஏமாற்றத்துடனும், குழப்பத்துடனும் திரும்பிச் செல்கின்றனர். எனவே, தஞ்சாவூரில் உள்ள கட்சி அலுவலகத்தை பெரும்பான்மையாக உள்ளவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான தீர்வு விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x