Published : 26 Jun 2022 12:04 PM
Last Updated : 26 Jun 2022 12:04 PM

சாகித்ய அகாடமி விருது | மூத்த எழுத்தாளர் மாலனுக்கு முதல்வர் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள மூத்த எழுத்தாள் மாலனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள ஊடகவியலாளர் நாராயணன் (எ) மாலன் அவர்களுக்கு வாழ்த்துகள். அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மொழிகள், ஆங்கிலத்தில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் படைப்புகளுக்கு சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருதுகள் விவரம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. பல்வேறு இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் வெளியான மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. தமிழ் மொழிக்கான விருதுக்கு மூத்த எழுத்தாளர் மாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பார்சி சமூகத்தில் பிணம் தூக்கும் பணிகளை செய்யும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பற்றி பேசும் ‘Chronicle of a Corpse Bearer’ என்ற ஆங்கில நாவலை, பிரபல இந்திய நாடக ஆசிரியர் சைரஸ் மிஸ்திரி எழுதியுள்ளார். பல விருதுகளைப் பெற்றுள்ள இந்தநாவல், 2015-ம் ஆண்டின் சிறந்த ஆங்கில இலக்கிய நூலுக்கான சாகித்ய அகாடமி பிரதான விருதையும் பெற்றுள்ளது.

இந்த நாவலை தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் மாலன், ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சாகித்ய அகாடமி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த படைப்பு தற்போது, 2021-ம் ஆண்டின் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விருதாளர்களுக்கு ரூ.50 ஆயிரம், சால்வை, செப்பு பாராட்டு பட்டயம் வழங்கப்படும். விருது விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அகாடமி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x