Published : 26 Jun 2022 06:58 AM
Last Updated : 26 Jun 2022 06:58 AM
சென்னை: கோயில்களின் பெருந்திட்ட பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அறநிலையத் துறைச் செயலர் பி.சந்தரமோகன், அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) இரா.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை தொடர்பாக சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட சில அறிவிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது, “ஆண்டு முழுவதும் பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்லும் பழநி, திருவண்ணாமலை, திருச்செந்தூர், ராமேஸ்வரம், திருத்தணி ஆகிய கோயில்களில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் ரூ.250 கோடியில் மேம்படுத்தப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இவற்றுக்கான பெருந்திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சாதாரண நாட்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், வாரவிடுமுறை நாட்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், முக்கிய விழாக் காலங்களில் 4 லட்சம் முதல் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் வருகின்றனர்.
இக்கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிழல் மண்டபம், நுழைவாயில்கள், கட்டமைப்பில் இருக்கும் பிரச்சினைகளை சரிசெய்தல் மற்றும் புதுப்பித்தல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என மலைக்கோயில், அடிவாரம், பழநி மலை மற்றும் இடும்பன் மலை, இடும்பன் குளம் மற்றும் சண்முகா நதி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.153 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சாதாரண நாட்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், மாத சஷ்டி மற்றும் கிருத்திகை நாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், ஆடிக் கிருத்திகையின்போது 5 லட்சம் பக்தர்களும் வருகின்றனர். இந்நிலையில், அங்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் கோயில் வளாகம், அன்னதான வளாகம், வாகனம் நிறுத்தும் வளாகம், மலைப் படிக்கட்டுகள் மேம்பாட்டு திட்டங்கள், மலைப்பாதை உள்ளிட்ட பணிகளை ரூ.175 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளும் வகையில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. பெருந்திட்ட வரைவுகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள உரிய ஆலோசனைகளை துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT