Published : 26 Jun 2022 06:16 AM
Last Updated : 26 Jun 2022 06:16 AM

ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவை நடத்த இபிஎஸ் தீவிரம் - கூட்டத்தை தடுக்க சட்ட வல்லுநர்களுடன் ஓபிஎஸ் தரப்பு ஆலோசனை

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை, ஏற்கெனவே அறிவித்தபடி ஜூலை 11-ம் தேதி நடத்துவதற்கான பணிகளை இபிஎஸ் தரப்பினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் அக்கூட்டத்தை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் தரப்பினர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவில் கடந்த ஜூன் 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தது. அப்போது முதல் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்தது. இரட்டை தலைமைதான் வேண்டும் என்பதில் ஓபிஎஸ் தரப்பும், இபிஎஸ் தலைமையில் ஒற்றைத் தலைமை என்பதில் இபிஎஸ் தரப்பும் உறுதியாக உள்ளன. எம்ஜிஆர் காலத்து மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தம்பிதுரை உள்ளிட்டோரின் சமரச முயற்சிகளும் தோல்வி அடைந்தன.

பொதுக்குழுவிலாவது தீர்வு கிடைக்கும் என்று தொண்டர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் 23-ம் தேதி அதிகாலை வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் விடிய விடிய நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில், புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற நிபந்தனையுடன் பொதுக்குழு கூட்டத்தை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

தீர்மானங்கள் நிராகரிப்பு

கூட்டத்திலாவது தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. பொதுக்குழுவில் கட்சியின் மூத்த தலைவர் தமிழ்மகன் உசேன் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என கூட்டத்தில் அறிவித்தார். இதனால் ஒற்றைத் தலைமை சர்ச்சை முடிவுக்கு வராமல் தொடர்கிறது.

அதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால், கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை முறையே ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இழந்துவிட்டதாக இபிஎஸ் தரப்பு வாதிட்டு வருகிறது. தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால், கட்சியின் அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளும் ரத்து செய்யப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு வாதிட்டு வருகிறது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், திட்டமிட்டபடி 11-ம் தேதி இபிஎஸ் தலைமையில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ், பொதுக்குழுவே நடக்காது என தெரிவித்துள்ளார். பொதுக்குழு தொடர்பாக இரு தரப்பினரிடையே சொற்போரும் நீடித்து வருகிறது.

பல்வேறு மாவட்டங்களில் அதிமுக அலுவலகங்களில் ஓபிஎஸ் படங்கள் அகற்றப்பட்டும், பேனர்களில் ஓபிஎஸ் படங்கள் அழிக்கப்பட்டும் வருகின்றன. நாகப்பட்டினம் போன்ற இடங்களில் இபிஎஸ்ஸூக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இதற்கிடையில் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பிய ஓபிஎஸ் மற்றும் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ ஆகியோர், எப்படியாவது 11-ம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவை தடுத்து நிறுத்துவதற்கான சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று, ஓபிஎஸ் தரப்பு முன்வைக்க வாய்ப்புள்ள வாதங்களுக்கு எதிராக வாதிடுவதற்கான சட்ட நுணுக்கங்கள் குறித்தும், ஓபிஎஸ்ஸின் திட்டத்தை முறியடிக்கவும் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

இரு தரப்பினரின் தொடர் ஆலோசனைகளால் கட்சி தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. ஒற்றைத் தலைமையோ, இரட்டை தலைமையோ, ஏதேனும் ஒன்றை விரைந்து முடிவு செய்து கட்சியில் ஒரு சுமுகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x