சென்னை மாநகரின் புறக்கணிக்கப்பட்ட தொகுதி ஆர்.கே.நகர்: வசந்திதேவி பேட்டி

சென்னை மாநகரின் புறக்கணிக்கப்பட்ட தொகுதி ஆர்.கே.நகர்: வசந்திதேவி பேட்டி
Updated on
2 min read

வேட்பாளருக்கு சில கேள்விகள்

ஆர்.கே. நகர் தொகுதி சென்னை மாநகரத்தின் புறக்கணிக்கப்பட்ட பகுதி. நகர்ப்புற ஏழ்மை நிறைந்த தொகுதி. உயர்ந்து நிற்கும் பெரு நகரங்களுக்கு மத்தியில் தீவு போலக் காட்சியளிக்கிறது ஆர்.கே.நகர் என்கிறார் கல்வியாளர் வசந்தி தேவி.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவி வகித்தவர் வசந்திதேவி.

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக ஆர்.கே.நகரில் போட்டியிடும் வசந்திதேவி தி இந்து (தமிழ்) இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி.

எப்படி அரசியலில் நுழைந்தீர்கள்?

கல்வியே ஓர் அரசியல்தான். கல்வியை யார் படிக்க வேண்டும். யார் விற்க வேண்டும் என்பதையே அரசியல் ஆக்குகின்றனர். ஒருவகைப்பட்ட அரசியலில் இருந்து மற்றொரு வகை அரசியலுக்குள் நுழைந்திருக்கிறேன். கல்வி, மனித உரிமைகள், பெண்கள் பாதுகாப்பு பேசிக்கொண்டிருந்த நான் இப்போது தேர்தல் அரசியல் பேசுகிறேன். அவ்வளவுதான்.

எதனால் ஆர்.கே.நகர் தொகுதியை தேர்தெடுத்தீர்கள்?

ஆர்.கே.நகரை நான் தேர்ந்தெடுக்கவில்லை. இங்கு போட்டியிட முடியுமா என்று விடுதலை சிறுத்தைகள் கேட்டார்கள். நானும் சம்மதித்தேன்.

ஆர்.கே. நகர் எப்படி இருக்கிறது?

மிக மிக மோசமாக இருக்கிறது. சென்னை மாநகரத்தின் புறக்கணிக்கப்பட்ட பகுதி இது. நகர்ப்புற ஏழ்மையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதை ஆர்.கே.நகரில் பார்க்கலாம். இங்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல், பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. வெளியில் இருந்து பார்க்கும் எல்லோருக்கும், ஆர்.கே. நகர் ஒரு நட்சத்திரத் தொகுதியாகத்தான் தெரியும். ஆனால் சுகாதாரமும், உள்கட்டமைப்பு வசதிகளும் அதலபாதாளத்தில் இருக்கும் தொகுதி இது. பிரச்சாரத்துக்கு சில தெருக்களில் நுழையவே முடியவில்லை. சாலைகள் மிகவும் கரடுமுரடாக இருக்கின்றன. தெரு விளக்குகள் கிடையாது.

சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து அகற்றப்பட்ட மக்கள் இங்கேதான் வாழ்கிறார்கள். இதனால் மக்களுக்கு வீட்டுப்பட்டா கிடையாது. அத்தோடு மருத்துவ வசதியும் முறையாக இல்லை. இருக்கும் மருத்துவமனையில் போதுமான அளவு மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மதியம் 12 மணிக்கு மேல் இயங்குவதில்லை.

இவர்களுக்கு வரும் தண்ணீரும் சுத்தமாக இல்லை. சில சமயங்களில் சாக்கடைத் தண்ணீரும், எண்ணைய் நிறுவனத்தின் கழிவும் கலந்த தண்ணீர்தான் கிடைக்கிறது. இங்கே வசிக்கும் மக்கள் அனைவரும் தினக்கூலித் தொழிலாளர்கள். ஏதாவது காரணத்தால் வேலைக்குப் போகமுடியாவிட்டால் பட்டினி கிடக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். உயர்ந்து நிற்கும் பெரு நகரங்களுக்கு மத்தியில் தீவு போலக் காட்சியளிக்கிறது ஆர்.கே. நகர்.

இவர்களுக்கு நீங்கள் கூறும் செயல் திட்டங்கள் என்ன?

முதலில் மக்களுக்கு சுகாதாரத்தை அளிக்க வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஏழைக் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். தொகுதி முழுக்க தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடைகள்தான் இருக்கின்றன. பள்ளிகள் அருகிலும் இவை ஏராளம் இருக்கின்றன. மதுவுக்கு அடிமையாகி நோயாளியாகிக் கிடக்கும் இளைஞர்களைக் காண முடிகிறது. இளம் விதவைகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றனர். மதுவிலிருந்து மீட்டு, அவர்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய உள்ளோம். கல்வி, பெண்கள் முன்னேற்றம், வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் முன்னெடுத்திருக்கிறோம்.

உங்களின் பிரச்சாரம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது?

நல்லபடியாகப் போகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தாண்டி கல்லூரி மாணவர்களும், கல்வி இயக்கத்தைச் சார்ந்தவர்களும் எனக்காகப் பிரச்சாரம் செய்கிறார்கள். தெருமுனைப் பிரச்சாரங்கள் செய்கிறோம். நிறையப்பேர் வாட்ஸ் அப் வழியாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

மக்களிடம் உங்களுக்கு வரவேற்பு இருக்கிறதா?

ஒவ்வொரு தெருவுக்கும் நேரடியாகச் சென்று வாக்கு சேகரித்திருக்கிறேன். மக்களிடையே ஒரு நட்புணர்வை என்னால் பார்க்க முடிகிறது. நிறைய பேர் மாற்றங்களைப் பேசும் கட்சி வேண்டும் என்கிறார்கள். அவை ஓட்டாக மாறுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in