

வெண்புள்ளி பாதிப்புடையவர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரியதொடர் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர் என்று மருத்துவமனை டீன் ஜெயந்தி தெரிவித்தார்.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ’உலக வெண்புள்ளி விழிப்புணாவு தினம்’கடைபிடிக்கப்பட்டது. அப்போது வெண்புள்ளி பாதிப்பு உள்ளவர்களை வேறுபாடு இல்லாமல் அன்பாக அரவணைத்துச் செல்லவும், முறையான சிகிச்சை, அன்பானஅணுகுமுறையுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மருத்துவமனை டீன் ஜெயந்தி தலைமையில் மருத்துவ கண்காணிப்பாளர் ஜி.ஆர்.ராஜஸ்ரீ, தோல் நோய் மருத்துவர் ஆதிலட்சுமி, ஒருங்கிணைப்பு அலுவலர் ரமேஷ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. சிகிச்சையில் உள்ள வெண்புள்ளி குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் டீன் ஜெயந்தி பேசும்போது, “வெண்புள்ளி பாதிப்பு ஒரு தொற்று நோய் அல்ல.அது தோலில் ஏற்படும் ஒரு நிறமியின் குறைபாடே ஆகும். வெண்புள்ளி குறைபாடு உள்ளவர்களை எந்த வேறுபாடும் காட்டாமல், சமுதாயத்தில் உரிய அரவணைப்போடு நடத்த வேண்டும். இந்த மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட வெண்புள்ளி பாதிப்புடையவர்கள் உரிய தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர். இந்த பாதிப்புக்கு நவீன மருத்துவ சிகிச்சைகள் இம்மருத்துவமனையில் உள்ளன” என்றார்.