ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பொழுது போக்கு பூங்காவால் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ரூ.200 கோடி அரசு நிலம் மீட்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பொழுது போக்கு பூங்காவால் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ரூ.200 கோடி அரசு நிலம் மீட்பு
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட தனியாரிடம் இருந்து ரூ.200 கோடி மதிப்புள்ள அரசு நிலம் நேற்று மீட்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இங்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்த பொழுதுபோக்கு பூங்கா அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. அந்த இடத்தை மீட்கும்படி மாவட்ட நில நிர்வாக ஆணையம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் சைலேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதி நிலத்தை மீட்டனர். அந்த நிலத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டன.

இதற்கு அருகில் இருந்த தனியார் உணவகம் ஒன்றும் அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது. அந்த இடத்தையும் அதிகாரிகள் மீட்டனர். மீட்கப்பட்ட இடங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் அனாதீன இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை தொடரும்

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரனிடம் கேட்டபோது “பொழுதுபோக்கு பூங்கா மற்றும் தனியார் ஹோட்டல் ஆகியவை அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்திருந்தன. இந்த ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.200 கோடி” என்றார். இதுபோல் முக்கிய ஆக்கிரமிப்புகளை அடுத்தடுத்து மீட்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in