

தமிழக வளர்ச்சி குறித்து என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா என அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை என்.முத்துவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:
தற்போதைய தேர்தலில் மாற்றுக் கட்சி என்ற பெயரில் சிலர் களம் இறங்கியுள்ளனர். மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு போடும் வாக்கு, கடலில் விழுந்த மழைக்கு, பாறையில் விழுந்த விதைக்கு சமம். விலை மதிப்பில்லாத உங்கள் வாக்கு பலன் இன்றி போய்விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு நீங்கள் அதிமுகவுக்குதான் வாக்கு அளிக்க வேண்டும்.
5 ஆண்டு கால ஆட்சியில் 54 தலைப்புகளின் கீழ் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். ஆனால் என்ன செய்தீர்கள் என ஸ்டாலின் கேள்வி கேட்கிறார். அதிமுக ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என்று சொல்லும் அவரிடம் நான் கேட்கிறேன், தமிழக வளர்ச்சி குறித்து என்னுடன் நேரிடையாக விவாதிக்கத் தயாரா. தயார் என்றால் நான் வரத் தயார். ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அவசரத்தில் பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்கக் கூடாது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியதன் மூலமாக அச்சத்தில் இருந்தும், கோயில்களில் அன்னதானத் திட்டம் கொண்டு வந்ததன் மூலமாக பசியில் இருந்தும், கல்விக்காக ரூ.18 ஆயிரம் கோடியை ஒதுக்கியதன் மூலமாக அறியாமை எனும் இருளையும் முதல்வர் போக்கியுள்ளார். ஆக, அச்சம், பசி, அறியாமை ஆகியவற்றுக்கு விடுதலை கொடுத்தவர் அவர்.
தமிழகத்தில் நாங்கள் கால் ஊன்றப் போகிறோம் என்று வடக்கில் இருந்து வெங்கய்யநாயுடு, பிரகாஷ்ஜவடேகர் போன்றோர் கிளம்பி வந்துள்ளனர். இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.