

மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வில், நாகர்கோவிலை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநரின் மகன் ராம்கிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
அகில இந்திய அளவில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 82 பேர் தேர்ச்சி பெற்றனர். இத்தேர்வில் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த ராம்கிருஷ்ணன் (26) அகில இந்திய அளவில் 268-வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இவரது தந்தை ராமையா பிள்ளை. அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் ஆதிமுத்துலெட்சுமி.
மாணவர் ராம்கிருஷ்ணன், சென்னையில் மெக்கானிக் கல் இன்ஜினீயரிங் முடித்து விட்டு, தொடர்ந்து எம்.பி.ஏ. முடித்தார். சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் வேலை செய்தார்.
தொடர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதத் தொடங்கியவர், இரண் டாவது முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
ராம்கிருஷ்ணன் கூறும்போது, `சென்னையில் தனியார் நிறுவனத்தில் ரூ. 35 ஆயிரம் சம்பளத்தில் பார்த்த வேலையை விட்டுவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரானபோது, என் குடும்பத்தினர் மறுப்பு சொல்லாமல் ஆதரித்தனர். என் பெற்றோருக்கும், அண்ணன் சரவணனுக்கும் நன்றி சொல்ல வேண்டிய தருணம் இது’ என்றார்.