Last Updated : 30 Jun, 2014 10:00 AM

 

Published : 30 Jun 2014 10:00 AM
Last Updated : 30 Jun 2014 10:00 AM

சாமானியரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா மத்திய பட்ஜெட்?

மத்திய ரயில்வே பட்ஜெட் வரும் ஜூலை 8-ம் தேதியும் பொது பட்ஜெட் வரும் 10-ம் தேதியும் தாக்கல் செய்யப்படுகின்றன. பட்ஜெட் பற்றி உரத்த குரலில் இப்போது யார் பேசுகிறார்கள்? வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இங்குள்ள நிதி முதலீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை தரகர்கள், தொழில் துறை கூட்டமைப்புகள், கட்டமைப்பு நிறுவனங்கள் ஆகியவை கூறும் கருத்துக்கள்தான் பட்ஜெட் பற்றிய பிரதான கருத்துக்களாக உள்ளன.

அடுத்த அரசின் பொருளாதார கொள்கைகள் என்னவாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை இந்த குழுவினர் மக்களவைத் தேர்தலுக்கு முன்பே முன்வைக்க, அதை ஒட்டியே மோடியின் பொருளாதாரக் கூற்றுகள் இருந்தன. தேர்தலுக்கு பின்பும் இந்த கருத்து ஒற்றுமை தொடர்கிறது.

இதில் முக்கியமானது, ‘பொருளாதார வளர்ச்சிதான் நம் எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு’ என்பதா கும். அதே நேரம், சாமானியரின் பொருளாதாரத்தை மாற்றி அமைக் கக்கூடியதாக பட்ஜெட் இருப்பது அவசியம்.

விவசாயத் துறைக்கு உரமூட்டுமா?

கடந்த பத்து, இருபது ஆண்டுகளாக உதாசீனப்படுத்தப்பட்ட துறையாக இருப்பது விவசாயம். 125 கோடி மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. விவசாய வளர்ச்சி குறைந்துகொண்டே போகிறது.

விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லாமல் இருப்பது, பரந்துபட்ட விவசாயிகள் தற்கொலை, கிராமம் – நகரங்கள் இடையே விரிவடையும் ஏற்றத்தாழ்வு எனப் பல பிரச்சினைகளை பிரதானமாக யாரும் முன்னிறுத்துவதில்லை. கடன் தள்ளுபடி என்பது போன்ற மேம்போக்கான கொள்கைகளை விடுத்து உண்மையிலேயே விவசாயத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டிலாவது இடம்பெறுமா?

உரத்த குரல் இல்லாதோர் நிலை உயருமா?

பணக்காரர்கள் – ஏழைகள் இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. நம் எல்லா கொள்கைகளும் பணக்காரர்களுக்கே சாதகமாக உள்ளன. பழங்குடியினர், தலித் கள், விவசாயிகள், நகர்ப்புற குடிசைவாழ் மக்கள் என உரத்த குரல் இல்லாத ஏழைகளின் எண்ணிக்கை, நம் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் மேல். இவர்களது வாழ்வாதாரம், பொருளாதார மேம்பாட்டுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பது இந்த பட்ஜெட் முன்பு உள்ள இன்னொரு முக்கியமான சவால்.

சீர்கேடு ஏற்படுத்தாத வளர்ச்சி

நீடித்த, நிலையான பொருளாதார வளர்ச்சி என்பது சுற்றுச் சூழலை பாதிக்காத வளர்ச்சியாக இருக்கவேண்டும். ஆனால், நமது வளர்ச்சிக்கு பெரிய சுற்றுச்சூழல் சீர்கேட்டை விலையாக கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். சுற்றுச்சூழல் சீர்கேட்டை குறைத்து வளர்ச்சியை எப்படி ஏற்படுத்தப்போகிறோம் என்று பார்ப்பது அவசியம்.

உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை, தவறும் பருவ மழை, தேக்க நிலையில் விவசாயம், அதிகரிக்கும் சாலை, ரயில் போக்கு வரத்து கட்டணங்கள், இவை அனைத்தும் உணவு விலையை உயர்த்தும். இதற்கு பட்ஜெட் என்ன பதில் சொல்லப்போகிறது? பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, வட்டி விகிதத்தை குறைப்பது, நேரடி வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பது போன்றவற்றுடன், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் சேர்த்தே எடுக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

வளர்ச்சிக் கொள்கைகளும் பணவீக்க கொள்கைகளும் எதிர்மறையாக உள்ளபோது ஏற்படும் சிக்கலை பட்ஜெட் எவ்வாறு தீர்க்கப்போகிறது? கருப்பு பணத்தை வெளிநாட்டில் இருந்து எடுப்பதும் உள்நாட்டில் உள்ளதை வெளிக்கொணர்வதும் எவ்வளவு முக்கியமோ, அதற்கு இணையாக நாட்டில் அனைத்து மட்டத்திலும் ஊழலை நீக்குவது அவசியம். ஏனென்றால், ஊழல்தான் கருப்பு பணத்தின் ஊற்றுக்கண். இதற்கு பட்ஜெட்டில் விடை உண்டா?

இவை எல்லாம் பொதுவான பொருளியல் விவாதங்களில் இடம்பெறுபவை அல்ல. இவை சாமானியரின் பொருளாதார எதிர்பார்ப்புகள். சாமானியரின் வாக்குகளால் பதவிக்கு வந்த மோடி அரசு, அவர்களுக்கே முதல் சேவகராக இருக்கவேண்டும். இதை மட்டுமே நினைவில் நிறுத்தி பட்ஜெட் 2014-15 தயாரிக்கப்படவேண்டும்.

(கட்டுரையாளர்: எஸ்.ஜனகராஜன்,
பேராசிரியர், சென்னை வளர்ச்சி மையம்,
சென்னை)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x