Published : 03 May 2016 01:13 PM
Last Updated : 03 May 2016 01:13 PM

பாளை.யில் மே 12-ல் ஜெயலலிதா பிரச்சாரம்: ஹெலிபேட், மேடை அமைக்கும் பணி தீவிரம்

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மே 12-ம் தேதி பாளையங்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார். இதற்காக ஹெலிபேட் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் திமுக தலைவர் மு. கருணாநிதி நேற்று மாலையில் பிரச்சாரம் மேற்கொள்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. 10 ஆண்டுகளுக்குப் பின் அவர் இந்த திடலில் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டதால் கட்சியினரி டையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப் பட்டது. ஆனால் கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு திருநெல்வேலி பிரச்சாரப் பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இதனால் திமுகவினர் ஏமாற்றம் அடைந்தனர்.

ஜெயலலிதா வருகை

இந்நிலையில், அதிமுக சார்பில் சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தின்போது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்திருந்தார். அதனால், நெல்லையில் வரும் 12-ம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுக்கூட்டத்துக்கு ஜெயலலிதா வருவாரா என்பதில் கட்சியினரிடையே சந்தேகம் எழுந்தது.

ஆனால், குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாளையங்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா வரும் 12-ம் தேதி பிரச்சாரம் செய்யவுள்ளதை அதிமுக நிர்வாகிகள் நேற்று உறுதி செய்தனர்.

இந்த பிரச்சார கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்த மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள மைதானத்தில்தான் இம்முறையும் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார்.

இதற்காக அந்த மைதானத்தில் மேடை அமைப்பு, தடுப்பு கம்பிகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதுபோல் முதல்வர் ஹெலிகாப்டரில் வந்திறங்க ஏற்கெனவே பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்ட பகுதியை சீரமைக்கும் பணிகளும் நேற்று முழுவீச்சில் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x