Published : 25 Jun 2022 06:29 AM
Last Updated : 25 Jun 2022 06:29 AM
சென்னை: நீட் தேர்வு அறிமுகமாவதற்கு முன்பு, மாநில பாடத் திட்டப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு, பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்களுடன் மருத்துவப் படிப்பை சிறப்பாக நிறைவு செய்துள்ள 28 மாணவ, மாணவிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள் அளித்து அவர்களை ஊக்குவிக்கிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் தங்கள் திறமையை தேசிய அளவில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மாநில பாடத்திட்டத்தில் திறமையாக படித்து மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர் என்பதாலேயே, மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2016-ல் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, மாநில பாடத்திட்டப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு 2022-ம் ஆண்டில் படிப்பை நிறைவு செய்து, இளநிலை மருத்துவப் படிப்பில் பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்ற 28 மாணவ, மாணவிகளை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்துக்கு அழைத்துப் பாராட்டினார்.
இவர்கள் அனைவரும் சென்னை ஓமந்தூரார், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், திருச்சி கிஆபெ விசுவநாதம், சேலம் மோகன் குமாரமங்கலம், சென்னை, செங்கல்பட்டு, மதுரை, தருமபுரி, திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்கி, 3 அல்லது அதற்கு மேற்பட்ட பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்றவர்கள்.
இவர்கள் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் சிறப்பு பதக்கத் தேர்வுகளிலும் பங்கேற்று 3 பதக்கங்களுக்கு மேல் வென்றவர்கள். இத்தேர்வுகள் எழுத்து, செயல்முறை, நேர்காணல் என கடினமான நிலைகளை கொண்டதாகும். அனைத்து பாடப் பிரிவுகளிலும் சிறந்து விளங்கியவர்களுக்கு கல்லூரியின் சிறந்த மாணவர் என்ற சான்றிதழும் வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிறந்தவர்கள் என்பதை பறைசாற்றும் விதமாக, 28 மாணவ, மாணவிகளுக்கும் ஸ்டெதாஸ்கோப், மருத்துவ சிகிச்சை கையேடு அடங்கிய பெட்டகத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT