

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் செஸ் விளையாட்டு போட்டிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணை விவரம்: அரசுப் பள்ளி மாணவர்களிடம் செஸ் விளையாட்டு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் வட்டாரம், மாவட்டம், மாநில அளவிலான போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் நபர்களுக்கு சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, செஸ் போட்டியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறியும் விதமாக, அனைத்துப் பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
அதை முன்னிட்டு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒருநாள் செஸ் போட்டி குறித்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும். செஸ் போட்டிகள், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட உள்ளன.
இதில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் 304 மாணவர்கள், சர்வதேச போட்டிகளை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
இதேபோல, 6 முதல் 8-ம் வகுப்பு வரையான போட்டிகளில் தேர்வாகும் 152 மாணவர்கள், சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.