Published : 25 Jun 2022 06:48 AM
Last Updated : 25 Jun 2022 06:48 AM
சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், முதியோர் உட்பட 17.96 லட்சம் பேர் பூஸ்டர் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. 3 மாதங்களுக்குப் பின்னர் நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐக் கடந்துவிட்டது. தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தவணை தடுப்பூசியைத் தவறாது போட்டுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியபோது, “தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
2 தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் நிறைவடைந்த, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் பூஸ்டர் தவணை தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மொத்தம் 30.27 லட்சம் பேரில் 12.31 லட்சம் பேர் மட்டுமே பூஸ்டர் தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர். 17.96 லட்சம் பேர் இன்னும் பூஸ்டர் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை. அவர்கள் உடனடியாக பூஸ்டர் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
பூஸ்டர் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால், ஒமைக்ரானின் பிஏ-5 வகை உள்ளிட்ட எந்த வகையான கரோனா வைரஸ் வந்தாலும், தீவிர உடல்நலப் பாதிப்பு மற்றும் உயிரிழப்பைத் தடுக்க முடியும்” என்றார்.
பூஸ்டர் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால், ஒமைக்ரானின் பிஏ-5 உள்ளிட்ட எந்த வகையான கரோனா வைரஸ் வந்தாலும், தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT