Published : 25 Jun 2022 07:43 AM
Last Updated : 25 Jun 2022 07:43 AM
திருவள்ளூர்: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ரூ.18 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற உள்ளதாக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் ராஜகோபுரம் மற்றும்பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்த இந்துசமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
அதற்காக பாலாலயம் நேற்று நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது, கோயில் மூலவர் உற்சவர் மற்றும் பிரகாரத்தில் உள்ள அனைத்து சன்னதி தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றன.
தொடர்ந்து, கோயிலில் திருப்பணிகள் தொடங்கப்படுவதையொட்டி சிறப்பு யாகங்களும் ஹோமங்களும் நடைபெற்றன.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு 2018-ம் ஆண்டு ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வேண்டும். கரோனா காலம் என்பதால் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.
இந்நிலையில், தற்போது கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பாலாலயம் நடத்தப்பட்டுள்ளது.
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலின் மண்டபம் மற்றும் ராஜகோபுரத்தை கருங்கல்லால் புனரமைத்தல், பக்தர்கள் ஓய்வுக்கூடம் கட்டுதல், அன்னதான மண்டபம் விரிவாக்க செய்தல், மதிற்சுவர், புற்றுமேடை, திருக்குளம் உள்ளிட்டவற்றை புதுப்பித்தல், முடிகாணிக்கை மற்றும் பொங்கல் மண்டபம் அமைத்தல், அன்னதான மண்டபம் விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட திருப்பணிகள் ரூ.18 கோடி மதிப்பில் நடைபெற உள்ளன.
சுமார் இரண்டு ஆண்டுகள் நடைபெறும் திருப்பணிகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நிகழ உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத் துறையின் வேலூர் இணைஆணையர் லட்சுமணன், கோயில் துணை ஆணையர் ஜெயப்பிரியா, நகராட்சி தலைவர் என்.இ.கே. மூர்த்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT